துமகூரு லோக்சபா தொகுதி யாருக்கு? 'ஆன்லைன்' சர்வேயில் காங்., அதிர்ச்சி!
துமகூரு லோக்சபா தொகுதி யாருக்கு? 'ஆன்லைன்' சர்வேயில் காங்., அதிர்ச்சி!
ADDED : ஏப் 12, 2024 05:55 AM

துமகூரு: துமகூரு லோக்சபா தொகுதியை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கையில், காங்கிரஸ் பிரசாரம் செய்கிறது. ஆனால் தற்போது வெளியான ஆன்லைன் ஓட்டுப்பதிவு, அக்கட்சியை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.
தனக்கு சீட் கிடைக்காத அதிருப்தியில், முத்தஹனுமேகவுடா, காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.,வுக்கு சென்றார். இம்முறை போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என, மிகவும் எதிர்பார்த்தார். ஆனால் சோமண்ணா, கட்சி மேலிடத்துக்கு நெருக்கடி கொடுத்து, துமகூரு தொகுதியில் சீட் பெற்றார். பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.
இதனால், பா.ஜ.,வில் இருந்து மீண்டும் காங்கிரசுக்கு தாவிய முத்த ஹனுமேகவுடா, துமகூரு தொகுதியில் களமிறங்கி உள்ளார். இவரை வெற்றி பெற வைக்க, காங்கிரஸ் தலைவர்கள் முயற்சிக்கின்றனர்.
பெங்களூரை சேர்ந்த சோமண்ணாவை, துமகூரில் களமிறக்கியதால் பா.ஜ.,வின் முன்னாள் அமைச்சர் மாதுசாமி உட்பட, பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை பொருட்படுத்தாமல் பா.ஜ., சோமண்ணாவுக்கு சீட் கொடுத்தது. எதிர்ப்பு அலை உள்ளதால், இவரை எளிதில் தோற்கடித்து தொகுதியை கைப்பற்றலாம் என, காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.
லோக்சபா தேர்தல் தொடர்பாக, இதுவரை பல ஆய்வறிக்கைகள் வெளியானது. தும்கூர் நியூஸ் என்ற செய்தி சேனல், 'ஆன்லைன்' வழியாக ஒரு ஓட்டெடுப்பு நடத்தியது. இதில், பா.ஜ., வேட்பாளர் சோமண்ணாவுக்கு ஆதரவாக அதிகமானோர் ஓட்டு போட்டுள்ளனர். முத்தஹனுமேகவுடா இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
சோமண்ணாவுக்கு 59.11 சதவீதம், முத்தஹனுமேகவுடாவுக்கு, 39.62 சதவீதம் மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். மற்ற வேட்பாளர்களுக்கு 1.26 சதவீதம் மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். இது, காங்., தரப்புக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

