கூட்டணிக்கான கட்சிகளை முடிவு செய்ய இபிஎஸ்க்கு அதிகாரம்; அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்
கூட்டணிக்கான கட்சிகளை முடிவு செய்ய இபிஎஸ்க்கு அதிகாரம்; அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்
UPDATED : டிச 10, 2025 12:08 PM
ADDED : டிச 10, 2025 11:02 AM

சென்னை: கூட்டணிக்கான கட்சிகளை முடிவு செய்ய இபிஎஸ்க்கு அதிகாரம் அளித்து உட்பட அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காலை பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு, தற்காலிக அவை தலைவர் கே.பி.முனுசாமி தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் 3 ஆயிரம் பேர், சிறப்பு அழைப்பாளர் உட்பட மொத்தம் 5 ஆயிரம் பங்கேற்று உள்ளனர்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில் வேறு கட்சிகள் இணையவில்லை. அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்குமாறு குரல் கொடுத்த செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவரும் விஜய் கட்சியில் இணைந்து விட்டார்.
இந்த பரபரப்பான சூழலில் கூடியுள்ள பொதுக்குழு கூட்டத்தில், அ.தி.மு.க., தலைமையில் மெகா கூட்டணி அமைய, பிரிந்தவர்களை இணைப்பது குறித்து முடிவு எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, அ.தி.மு.க., மட்டுமல்ல, தே.ஜ., கூட்டணி மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
* தமிழகத்தில் கூட்டணிக்கு அதிமுகவே தலைமை தாங்கும் என்று தீர்மானம் நிறைவேற்றம்.
* வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜ கூட்டணி சேர்ந்து போட்டியிட அங்கீகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றம்.
* கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.
* மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதில் திமுக அரசு தோல்வியடைந்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.
* வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றம்.
* நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம்.
* முதலீட்டில் ஆமை வேகம், குறையும் முதலீடுகள், தமிழக மக்களை ஏமாற்றி, போலி புள்ளி விவரங்களை அள்ளி வீசும் முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
* தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளாக சிறுமிகள், இளம் பெண்கள், வயதான பெண்கள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
* தமிழக மக்களை தொடர்ந்து கடனாளிகளாக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
* பாதுகாப்பற்ற நிலையில் தமிழகத்தை வைத்திருக்கும் நிர்வாகத் திறனற்ற திமுக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
* நீட் உளிட்ட திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
* மதுரை மேயர் ராஜினாமா செய்யும் அளவிற்கு ஊழல் நடைபெற்றிருப்பதற்கு கண்டம் தெரிவித்து தீர்மானம்.
* பட்டியலினத்தை இழிவு செய்தும், ஒடுக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைப்பதும் திமுக ஆட்சியில் நடந்து கொண்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
* உப்பிலிப்பாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை தமிழகத்திலேயே மிக நீளமான பாலத்தை, அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டத்தை ஸ்டிக்கர் ஒட்டி, திமுக அரசு கொண்டு வந்ததாக திறப்பு விழா நடத்தி இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
* நீதித்துறை மீதான ஆட்சியாளர்களின் மிரட்டல்களை கைவிடவேண்டும். நீதித்துறையில் அரசின் தலையீடு இருக்கக் கூடாது. நீதித்துறைக்கே சவால்விடும் ஆட்சியாளர்களின் ஆதிக்க மனநிலையை கண்டித்து தீர்மானம்.
* கூட்டணிக்கான கட்சிகளை முடிவு செய்ய இபிஎஸ்க்கு அதிகாரம் அளித்தும், இபிஎஸ்-ஐ மீண்டும் முதல்வர் ஆக்க சூளுரைப்போம் என வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

