தசரா திருவிழா முன்னேற்பாடு: மைசூரு புறப்பட்ட 9 யானைகள்
தசரா திருவிழா முன்னேற்பாடு: மைசூரு புறப்பட்ட 9 யானைகள்
ADDED : ஆக 22, 2024 04:26 AM

ஹுன்சூரு: தசரா விழாவில் பங்கேற்பதற்காக, முதல் கட்டமாக, ஒன்பது யானைகள், காட்டில் இருந்து, மைசூரு நகருக்கு நேற்று புறப்பட்டன.
உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா, அக்டோபர் 3ம் தேதி முதல், 12ம் தேதி வரை நடக்கிறது. இம்முறை நல்ல மழை பெய்துள்ளதால், மாநிலம் செழிப்பாக உள்ளது.
எனவே தசரா விழாவை இந்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாடுவதற்கு, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. தசரா விழாவின் பிரதான அடையாளமான ஜம்பு சவாரி ஊர்வலத்தில், 14 யானைகள் பங்கேற்கின்றன.
இதற்காக, வெவ்வேறு வனப்பகுதியில் இருந்து, மூன்று கட்டங்களாக யானைகள் மைசூருக்கு அழைத்து வரப்படுகின்றன.
தங்க அம்பாரி
முதல் கட்டமாக, தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி தேவியை சுமக்கும் அபிமன்யூ உட்பட ஒன்பது யானைகளை, மைசூருக்கு அனுப்பும் நிகழ்ச்சி மைசூரு மாவட்டம், ஹுன்சூர் தாலுகாவின் வீரனஹொசஹள்ளி கிராமத்தில் நேற்று நடந்தது.
சமூக நலத்துறை அமைச்சரும், மைசூரு மாவட்ட பொறுப்பு அமைச்சருமான மஹாதேவப்பா, யானைகளுக்கு மலர் துாவி, மைசூரு அனுப்பி வைத்தார்.
பின், அவர் கூறியதாவது:
முதல் கட்டமாக, அபிமன்யூ தலைமையில், கஞ்சன், ஏகலைவா, பீமா, லட்சுமி, வரலட்சுமி, ரோஹித், தனஞ்செயா, கோபி ஆகிய யானைகள் மைசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மைசூரு அசோகபுரத்தில் உள்ள அரண்ய பவனில் தங்க வைக்கப்பட்டு, ஆக., 23ல் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்படும்.
அர்ஜுனா யானை
யானை என்பது பெரிய அடையாளம். யானை என்பது வனத்தின் வளம். வன விலங்குகளை பாதுகாப்பது மிகவும் அவசியம். இந்தாண்டு மைசூரில் கடும் வெயில் அடித்தது.
எனவே சுற்றுச்சூழலை பாதுகாத்தால், வானிலை மாற்றம் ஏற்படும். அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க சூளுரைப்போம்.
அர்ஜுனா யானை, 14 தசரா விழாவில் பங்கேற்று, ஒன்பது முறை தங்க அம்பாரியை சுமந்துள்ளது. சமீபத்தில் வீர மரணம் அடைந்தது. மனிதர்கள் - விலங்குகள் மோதலுக்கு முக்கிய காரணமே காடுகளை அழித்தல் தான். இதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே வேளையில், வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, தசரா விழாவில் பங்கேற்கும் யானைகளின் விபரங்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார்.
மைசூரு மஹாராஜா
அவர் கூறியதாவது:
மைசூரு மஹாராஜா ஜெய சாமராஜேந்திர உடையார், முன்பெல்லாம் ஹெச்.டி., கோட்டையின் மாஸ்டி குடி பகுதியில், யானைகளுக்கு பூஜை செய்து, தசரா விழாவுக்கு அனுப்பி வைப்பார். தற்போது, ஹுன்சூரின் வீரனஹொசஹள்ளியில் பூஜை செய்யப்படுகிறது.
உலகின் மிக பெரிய சவால், பருவ நிலை மாற்றம் தான். இதைத் தடுக்க, வனத்தை பாதுகாக்க வேண்டும். வனத்தை அழித்ததன் விளைவாக தான், கேரளாவின் வயநாடில் நிலச்சரிவு ஏற்பட்டு, பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், கால்நடை துறை அமைச்சர் வெங்கடேஷ், எம்.எல்.ஏ.,க்கள் ஹரீஷ்கவுடா, அனில் சிக்கமாது, ரவிசங்கர், எம்.பி., சுனில் போஸ், மைசூரு கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி, எஸ்.பி., விஷ்ணுவர்தன், மைசூரு மண்டல வனப் பாதுகாப்பு அதிகாரி மாலதி பிரியா, புலிகள் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
யானைகள் நேற்றிரவு மைசூரு வந்து சேர்ந்தன.