சமையல் எண்ணெய் விலையை உயர்த்தக்கூடாது: மத்திய அரசு
சமையல் எண்ணெய் விலையை உயர்த்தக்கூடாது: மத்திய அரசு
ADDED : செப் 17, 2024 11:30 PM

புதுடில்லி, : நம் நாட்டின் சமையல் எண்ணெய் தேவையில் 50 சதவீதத்துக்கும் கூடுதலாக இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், உலகளவில் எண்ணெய் விதைகளின் சாகுபடி அதிகரித்துள்ளதால், அவற்றின் விலை சரிந்து, இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி மேலும் அதிகரித்தது.
இது உள்நாட்டில் எண்ணெய் விதை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை பாதிக்கும் என்பதால், அவர்களின் நலனைக் காக்கும் வகையில், மத்திய அரசு கடந்த வாரம் கச்சா பாமாயில், சூரிய காந்தி, சோயா ஆகியவற்றின் இறக்குமதி வரியை 20 சதவீதம் உயர்த்தியது.
இந்நிலையில், இறக்குமதி வரி உயர்வை காரணம் காட்டி, சமையல் எண்ணெய் விலையை சுத்திகரிப்பு நிறுவனங்கள் உயர்த்தக்கூடாது என அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விவாதிக்க, மத்திய உணவுத் துறை செயலர் சன்ஜீவ் சோப்ரா தலைமையில் நேற்று கூட்டம் நடந்தது.
இதன்பின், அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சுங்கவரி உயர்த்தப்படுவதற்கு முன்பே இறக்குமதி செய்யப்பட்டு கையிருப்பில் உள்ள, 30 லட்சம் டன் எண்ணெய், தாராளமாக அடுத்த 45 முதல் 50 நாட்களுக்கு போதுமானது.
குறைந்த வரியில் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய் இருப்பு உள்ள வரை, விலையை உயர்த்தக்கூடாது என சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சங்கங்களின் உறுப்பினர்கள் அனைவரும் இதை பின்பற்றுவதை உறுதி செய்யவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.