'வீல் சேர்' வழங்குவதில் தாமதம்: விமான நிலையத்தில் விழுந்த மூதாட்டி
'வீல் சேர்' வழங்குவதில் தாமதம்: விமான நிலையத்தில் விழுந்த மூதாட்டி
ADDED : மார் 09, 2025 12:07 AM

புதுடில்லி: டில்லியில் இருந்து கர்நாடகாவின் பெங்களூருக்கு செல்ல, ஏர் இந்தியா விமானத்தில், முன்னாள் ராணுவ அதிகாரி மனைவி ராஜ் பாஸ்ரிச்சா, 82, டிக்கெட் புக் செய்தார். அப்போது, தனக்கு விமான நிலையத்தில் வீல் சேர் வேண்டும் என, அவர் டிக்கெட்டில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு, ஏர் இந்தியாவும் சம்மதம் தெரிவித்தது.
இந்நிலையில், பெங்களூருக்கு செல்ல டில்லி விமான நிலையத்துக்கு, தன் குடும்பத்தினருடன், ராஜ் பாஸ்ரிச்சா சமீபத்தில் வந்தார். விமான நிலையத்துக்கு வந்த அவருக்கு, வீல் சேர் வழங்கப்படவில்லை.
வீல் சேருக்காக அவர் ஒரு மணி நேரத்துக்கும் மேல் விமான நிலைய வாயிலில் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அதிருப்தி அடைந்த குடும்பத்தினர், மூதாட்டி ராஜ் பாஸ்ரிச்சாவை மெதுவாக நடக்க வைத்து அழைத்துச் சென்றனர்.
சிறிது துாரம் நடந்து சென்ற மூதாட்டி, கால் இடறி கீழே விழுந்தார். இதில் தலை, மூக்கில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதன்பின் தான், வீல் சேர் வந்தது.
மூதாட்டி ராஜ் பாஸ்ரிச்சாவுக்கு முதலுதவி அளித்து, அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். மூக்கில் ரத்தம் சொட்டிய நிலையில், விமானத்தில் ஏறி பெங்களூருக்கு அவர் புறப்பட்டுச் சென்றார்.
மூதாட்டியின் பேத்தி பருல் கன்வார் கூறுகையில், “பாட்டியின் முதலுதவிக்கு கூட யாரும் வரவில்லை. தற்போது அவர் ஐ.சி.யு.,வில் உள்ளார்,'' என்றார்.
ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், 'பெண் பயணி மிகவும் தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார். அவர், வீல் சேருக்காக ஒரு மணி நேரம் காத்திருக்கவில்லை. இது ஆதாரமற்றது.
'வீல் சேருக்கு அதிக தேவை இருந்ததால், சிறிய தாமதம் ஏற்பட்டது. சுய விருப்பத்தின்படியே அந்த பெண் பயணி நடந்து சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது' என, குறிப்பிடப்பட்டுள்ளது.