ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள 'மாஜி' டி.ஜி.பி., தாமஸ்..
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள 'மாஜி' டி.ஜி.பி., தாமஸ்..
ADDED : அக் 03, 2025 03:49 AM

கொச்சி: கேரள முன்னாள் டி.ஜி.பி., ஜேக்கப் தாமஸ், 65, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் நேற்று முறைப்படி இணைந்தார்.
ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தின் நுாற்றாண்டு மற்றும் விஜயதசமி விழா நாடு முழுதும் நடக்கின்றன.
அந்த வகையில், கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கொச்சியில் நேற்று நடந்த விழாவில், மாநில முன்னாள் டி.ஜி.பி., ஜேக்கப் தாமஸ், ஆர்.எஸ்.எஸ்.,சில் முறைப்படி சேர்ந்தார். ஆர்.எஸ்.எஸ்., சீருடை அணிந்து வந்த அவர், விழாவுக்கு தலைமை தாங்கினார்.
இது குறித்து, முன்னாள் டி.ஜி.பி., ஜேக்கப் தாமஸ் கூறியதாவது:
கேரள மக்கள் ஆர்.எஸ்.எஸ்-., அமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல. கலாசார வலிமை கொண்ட நபர்களை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ்.,சின் நோக்கம். இத்தகைய நபர்கள் அதிகமிருந்தால், சமூகம் வலுவடையும். அது தேசத்தை வலுப்படுத்த உதவும். தனிநபர் மூலம் வலுவான தேசத்தை உருவாக்க ஆர்.எஸ்.எஸ்., விரும்புகிறது; நாட்டை ஒன்றிணைக்கும் சக்தியாகவும் ஆர்.எஸ்.எஸ்., விளங்குகிறது.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு ஜாதி, மதம், மொழி என்ற வேறுபாடுகள் இல்லை. நான் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுகிறேன். பள்ளி, கல்லுாரி படிப்பை கிறிஸ்துவ கல்வி நிறுவனத்தில் முடித்தேன். தற்போது, ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழாவுக்கு தலைமை வகிக்கிறேன் என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கேரளாவில் உள்ள விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் இயக்குநராகவும் பணியாற்றிய ஜேக்கப் தாமஸ், ஓய்வுக்கு பின், 2021ல் பா.ஜ.,வில் சேர்ந்தார்.