தேர்தல் ஆணையம் பாரபட்சம் காங்., ஹரிபிரசாத் குற்றச்சாட்டு
தேர்தல் ஆணையம் பாரபட்சம் காங்., ஹரிபிரசாத் குற்றச்சாட்டு
ADDED : மே 23, 2024 10:19 PM

பெங்களூரு: 'தேர்தல் ஆணையம், காங்கிரசை மிரட்டுவதை விட்டு விட்டு, நியாயமான முறையில், கட்சி பாகுபாடு பார்க்காமல் தன் பணியை தொடரட்டும்,'' என காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
நாட்டில் நடக்கும் லோக்சபா தேர்தலில், இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, பாதுகாப்பின்றி, பாரபட்சத்துடன் நடப்பதை வாக்காளர்கள், உன்னிப்பாக கவனிக்கின்றனர்.
இம்முறை நடக்கும் தேர்தல், ஜனநாயகம் மற்றும் அரசியல் அமைப்பின் பாதுகாப்பை நிர்ணயிக்கும் தேர்தலாகும்.
இம்முறை ஆட்சிக்கு வந்தால், அரசியலமைப்பை மாற்றுவதாக பா.ஜ., - எம்.பி.,க்கள், மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர். இதற்கு பா.ஜ.,வோ, பிரதமர் நரேந்திர மோடியோ விளக்கம் அளிக்கவில்லை.
பிரதமர் மோடி அரசியல் அமைப்பை மாற்ற முற்படுவோரை, பொருளாதார ஆலோசகராக நியமித்துள்ளார்.
நாட்டின் அரசியலமைப்பை ரத்து செய்யலாம் என்ற தவறான எண்ணம் ஏற்படும் வகையில், கருத்து தெரிவிக்க கூடாது என, காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதை கவனித்தால் அரசியலமைப்பை மாற்றும் பா.ஜ.,வின் நோக்கத்தில், தேர்தல் ஆணையத்துக்கு சம்மதம் உள்ளதா. அரசியலமைப்பு அபாயத்தில் உள்ளதை, மக்களுக்கு தெரிவிப்பது தவறா.
பா.ஜ., தலைவர்கள் பகிரங்கமாகவே, சர்ச்சைக்குரிய வகையில் உரையாற்றுகின்றனர். இது தேர்தல் ஆணையத்தின் கண்களுக்கு தெரியவில்லையா. எனவே, தேர்தல் ஆணையம், காங்கிரசை மிரட்டுவதை விட்டு விட்டு, நியாயமான முறையில், கட்சி பாகுபாடு பார்க்காமல் தன் பணியை தொடரட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.