கொடிக்கம்பம் வழக்கு: வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத அதிகாரிகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
கொடிக்கம்பம் வழக்கு: வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத அதிகாரிகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
UPDATED : செப் 18, 2025 06:52 AM
ADDED : செப் 18, 2025 04:17 AM

சென்னை: 'கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ள மாநில அரசுக்கு பாராட்டு தெரிவித்த, சென்னை உயர் நீதிமன்றம், அவற்றை அமல்படுத்தா விட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்துள்ளது.
'தமிழகம் முழுதும், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசின் இதர துறைகளுக்கு சொந்தமான, பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மதம் சார்ந்த அமைப்புகளின் கொடிக் கம்பங்களை, கடந்த ஏப்., 28ம் தேதிக்குள் அகற்ற வேண்டும்' என, கடந்த ஜனவரியில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணை இந்த வழக்கு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் கலெக்டர்கள் நேரில் ஆஜராகினர். தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, மண்டல மற்றும் மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன,'' எனக் கூறி, அதற்கான அரசாணையை தாக்கல் செய்தார்.
மேலும் கொடிக்கம்பங்கள் அமைக்க, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை, மாநில அரசு வகுத்துள்ளது எனக் கூறி, அதன் நகலையும் தாக்கல் செய்தார். பின் அவர் வாதிட்டதாவது:
அரசியல் கட்சிகள், அமைப்புகளின் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்காக கொடிக்கம்பங்கள் அமைக்கும் போது, சாலையில் தார்கள் மீதும், சாலை நடுவில் உள்ள 'சென்டர் மீடியன்' பகுதிகளிலும் கொடிக்கம்பங்கள் அமைக்க கூடாது; மூன்று நாட்களுக்கு மேல், கொடிக் கம்பங்களை வைத்திருக்க கூடாது என்பன உள்ளிட்டவை, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் இடம்பெற்று உள்ளன. இவ்வாறு அவர் வாதிட்டார்.
அரசாணை, வழிகாட்டு நெறிமுறைகளை பார்வையிட்ட நீதிபதி, தமிழக அரசின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தார். நடவடிக்கை மேலும், ''இந்த விதிமுறைகளையும், அரசாணையையும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். இவை ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும்படி, பாரபட்சமின்றி பின்பற்ற வேண்டும்.
''இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை, அமல்படுத்தாமல் மீறி செயல்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, எச்சரிக்கை விடுத்து விசாரணையை தள்ளி வைத்தார்.