ஜனநாயகத்தை காப்பாற்ற நடக்கும் தேர்தல் பஞ்சாப் முதல்வர் ஆவேசம்
ஜனநாயகத்தை காப்பாற்ற நடக்கும் தேர்தல் பஞ்சாப் முதல்வர் ஆவேசம்
ADDED : மே 01, 2024 01:37 AM

புதுடில்லி:“டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை நன்றாக இருக்கிறது,”என, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறினார்.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் மார்ச் 21ல் கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஏப்.1ல் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், திஹார் சிறைக்கு நேற்று வந்து, அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்துப் பேசினார்.
அதன்பின், பகவந்த் மான் நிருபர்களிடம் கூறியதாவது:
லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது. தினமும் இன்சுலின் செலுத்திக் கொள்வதாகக் கூறினார்.
அதேபோல், சிறை டாக்டர்கள் தினமும் வழக்கமான மருத்துவப் பரிசோதனை செய்கின்றனர் என்றார். தன்னைப் பற்றி டில்லி மக்கள் கவலைப்பட வேண்டாம் என்றும், தேர்தலில் தவறாமல் ஓட்டுப் போட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
கடந்த முறையைப் போலவே இந்த முறையும் ஜன்னல் வழியாகத்தான் சந்திக்க அனுமதித்தனர். இரும்புக் கம்பியால் நாங்கள் பிரிக்கப்பட்டோம்.
இது, பா.ஜ.,வின் வெறுப்பின் உச்சமாக இருக்கலாம். இந்த தேர்தல் வெற்றி அல்லது தோல்விக்கானது அல்ல. இது, அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதற்காக நடக்கும் தேர்தல்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 15ம் தேதி பகவந்த் மான் - கெஜ்ரிவால் ஆகிய இருவரும் சிறையில் சந்தித்துப் பேசினர்.