ADDED : செப் 10, 2024 10:42 PM
புதுடில்லி:டில்லி மாநகராட்சி நிலைக்குழு தேர்தல் வரும் 26ம் தேதி நடக்கிறது.
மாநகராட்சிக் கூட்டம் வரும் 26ம் தேதி காலை நடக்கிறது. அப்போது, நிலைக்குழு தேர்தல் நடத்தப்படுகிறது. நிலைக்குழுவில் இருந்த பா.ஜ., கவுன்சிலர் கமல்ஜித் செராவத், லோக்சபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டதால், நிலைக்குழு தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிகளை ராஜினாமா செய்தார்.
எனவே, அதனால் ஏற்பட்ட காலி இடத்துக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்தல் முடிந்தவுடன், நிலைக்குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மொத்தம் 18 பேர் கொண்ட நிலைக்குழுவில், சமீபத்தில் நடந்த வார்டு கமிட்டி தேர்தலில் 7 இடங்களை பா.ஜ., கைப்பற்றியது.
வார்டு குழுக்களில் இருந்து 12 உறுப்பினர்கள் நிலைக்குழுவில் சேருவர். அவர்களில் 7 பேர் பா.ஜ., கவுன்சிலர்கள். மீதமுள்ள ஆறு இடங்களுக்கு, பா.ஜ., மற்றும் ஆம் ஆத்மி இரண்டும் போட்டியிடும்.
மாநகராட்சியில் 5 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் திட்டங்களுக்கு நிலைக்குழுவின் அனுமதி கண்டிப்பாக தேவை என்ற விதிமுறை உள்ளது.

