ADDED : மார் 25, 2024 06:48 AM
பங்கார்பேட்டை: பங்கார்பேட்டை ஒட்டியுள்ள வனப் பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள், விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தின.
பங்கார்பேட்டையின் காமசமுத்ரா, பளமந்தி உள்ளிட்ட பல கிராம வயல்களில் அவ்வப்போது யானைகள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருவது வழக்கம்.
யானைகள் நுழையாதபடி தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் பலமுறை அரசின் கவனத்துக்கு கோரிக்கை வைத்தனர். உயிர் சேதம், பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க கோரியும் பலமுறை விவசாயிகள் போராட்டம் நடத்தி உள்ளனர்.
இந்நிலையில், விவசாயிகள், யானைகள் நுழையாதபடி சோலார் கம்பி வேலிகள் அமைத்திருந்தனர். அதில், மின் இணைப்பு வழங்கப்படவில்லை. நேற்று முன்தினம் நள்ளிரவு யானைகள் கூட்டமாக வந்து மின் கம்பங்களை துவம்சம் செய்து வீசி எறிந்துள்ளது.
விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த கேழ்வரகு, தக்காளி, உருளைக்கிழங்கு, குடமிளகாய் ஆகிய பயிர்களை நாசப்படுத்தி சென்றன.
பாதிக்கப்பட்ட விவசாயிகள், அதிகாரிகளிடம் புகார் அளித்து நஷ்ட ஈடு கோரியுள்ளதுடன், 'யானைகள் வயல்களில் நுழையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

