போட்டியின்றி ஒத்துழைப்பு இருந்தால் விண்வெளி ஆய்வுகளில் சாதிக்கலாம்: சுனிதா வில்லியம்ஸ் உடன் சத்குரு பேச்சு
போட்டியின்றி ஒத்துழைப்பு இருந்தால் விண்வெளி ஆய்வுகளில் சாதிக்கலாம்: சுனிதா வில்லியம்ஸ் உடன் சத்குரு பேச்சு
ADDED : அக் 16, 2025 10:38 PM

கோவை : ''விண்வெளி ஆய்வுகளில் நாடுகளுக்கு இடையேயான போட்டியை விட ஒத்துழைப்பின் மூலமே அதிகம் சாதிக்கலாம்,'' என, சத்குரு தெரிவித்தார்.
சத்குரு சென்டர் பார் கான்ஷியல் பிளானட் சார்பில், 'விழிப்புணர்வு, அறிவியல், ஆன்மிகம் மற்றும் உலகளாவிய தாக்கம் 2025' என்ற தலைப்பில், உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பங்கு பெற்ற மாநாடு, அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் ஹார்வர்ட் மருத்துவப்பள்ளியின் பெத் இஸ்ரேல் டீகோனஸ் மையத்தில் நடந்தது.
இந்த மாநாட்டில், 'விழிப்புணர்வான விண்வெளி ஆய்வுகள்' என்ற தலைப்பில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவுடன் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி விஞ்ஞானி காவ்யா மான்யபு உள்ளிட்டோர் கலந்துரையாடினர்.
இதில் சத்குரு பேசுகையில், ''நீங்கள் தொடர்ந்து அதிக அளவில் அதிகாரம் பெறும்போது, அதே அளவு அனைத்தையும் உள்ளடக்கிய, அரவணைத்து செல்லக்கூடிய தன்மைக்கு மாற வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில், நீங்கள் உங்களுக்கும் மற்ற அனைவருக்கும் ஒரு பேரழிவாக மாறிவிடுவீர்கள். நமது மனநிலையில் பாகுபாடு இருந்தால், மனித குலம் அதன் பாகுபாடுகளை விண்வெளியில் கூட கொண்டு செல்லும் அபாயம் உள்ளது. அங்கு போட்டியை விட ஒத்துழைப்பின் மூலம் தான் அதிகமாக சாதிக்க முடியும்.
நமது வேறுபாடுகளில் நாம் நிறைய முதலீடு செய்துள்ளோம். அந்த வேறுபாடுகள் பாகுபாடாக முதிர்ச்சியடைந்துள்ளன. ஒருவரை ஒருவர் கொல்ல தயாராக இருக்கும் அளவிற்கு கடுமையான பாகுபாடாக அது உள்ளது. இந்த அளவிலான பாகுபாடுடன், அதிக அதிகாரம் பெறுவது இன்னமும் ஆபத்தை அதிகரிக்கிறது. நாம் இந்த கிரகத்தை விட்டு ஆய்வுக்காக வெளியே செல்லும்போது, நமது வேறுபாடுகளை விட்டுவிட வேண்டும். நாம் கருப்பாகவோ, வெள்ளையாகவோ, ஆணாகவோ, பெண்ணாகவோ, அமெரிக்கராகவோ அல்லது வேறு ஏதாவது ஒருவராகவோ இருந்தாலும் சரி, அதையெல்லாம் விட்டுவிட வேண்டும். விண்வெளி ஆய்வு என்பது மனிதனின் அறிந்து கொள்ள துடிக்கும் ஏக்கத்தால் இயக்கப்பட வேண்டும். அது ஒரு அமெரிக்கரின் அல்லது ரஷ்யரின் அறிந்து கொள்ள துடிக்கும் ஏக்கமாகவே இருக்க கூடாது. அது ஒரு மனிதனின் அறிந்து கொள்ள துடிக்கும் ஏக்கமாக இருக்க வேண்டும். மேலும் அது ஒரு ஒத்துழைப்பாக மாற வேண்டும்,'' என்றார்.