ADDED : அக் 16, 2025 10:22 PM

சென்னை: கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற உத்தரவு அதிர்ச்சி அளிப்பதாகவும், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த கொடுந்துயர நிகழ்வு குறித்த உண்மையைக் கண்டறிய உச்சநீதிமன்றம் நியமித்துள்ள விசாரணை ஆணையத்தில் தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் பங்கேற்கலாம், ஆனால், அவர்கள் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டிருக்கக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது இல்லையா? தமிழகத்தில், தமிழர்கள் மரண நிகழ்வு குறித்த விசாரணையில் தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற நிபந்தனையை விதித்ததன் மூலம் உச்சநீதிமன்றம் ஒட்டுமொத்த தமிழ் அதிகாரிகளின் நேர்மையையும், ஒப்படைப்பையும் ஐயுறுகிறதா? ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அவமதிக்கும் உச்சநீதிமன்ற உத்தரவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
தமிழ் அதிகாரிகளுக்கு நடந்த இந்த அவமதிப்பிற்கு, தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கு ஏற்பட்ட இந்த தலைகுனிவிற்கு தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது கடும் கண்டனத்திற்குரியது. சுயமரியாதை, மாநில சுயாட்சி என பெரும் பேச்சுக்கள் பேசியவர்கள் இப்பொழுது வாய் மூடி இருப்பது ஏன்?
தமிழகத்தில் தமிழர்கள் உயிரிழக்கக் காரணமான துயர நிகழ்விற்காகத் தமிழர்களிடம் நடைபெறும் நீதி விசாரணையில் தமிழ் நன்கு தெரிந்த அதிகாரி இடம்பெறுவதுதானே சரியானதாக இருக்க முடியும்? தமிழர் நிலத்தின் வரலாறும், அரசியலும் தெரியாத, தமிழர் மண்ணிற்குச் சிறிதும் தொடர்பில்லாத அதிகாரிகள் விசாரணை செய்வது எப்படிச் சரியானதாக இருக்க முடியும்? அது விசாரணையில் தேவையற்ற தாமதத்தையும், தடங்கலையும் ஏற்படுத்தாதா?
தமிழ் அதிகாரிகளின் உண்மையும், உழைப்பும் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்தவருக்கும் சற்றும் குறைந்தது இல்லை. தமிழர்களின் மனதைக் காயப்படுத்துவதாக அமைந்துள்ள இவ்வுத்தரவை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.