ADDED : ஜூன் 27, 2024 06:42 AM
பெங்களூரு : கெம்பேகவுடா ஜெயந்தி நிகழ்ச்சி அழைப்பிதழில், மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பெயர்கள் இல்லாதது, புதிய விவாதத்துக்கு காரணமாகியுள்ளது.
கர்நாடகாவில் அரசு சார்பில், கெம்பேகவுடா ஜெயந்தி நிகழ்ச்சி, இன்று நடக்கவுள்ளது.
நிகழ்ச்சி அழைப்பிதழில் மத்திய கனரக தொழில்கள் நலத்துறை அமைச்சர் குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பெயர்கள் இல்லை. காங்கிரஸ் அரசு வேண்டுமென்றே, இருவரின் பெயரையும் போடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, டில்லியில் குமாரசாமி கூறியதாவது:
கெம்பேகவுடா நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில், என் பெயரையும், தேவகவுடா பெயரையும் போடாததற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. கெம்பேகவுடா யாருடைய சொத்தும் அல்ல. அனைவரும் தங்களுக்கு தெரிந்த வகையில் கொண்டாடுகின்றனர்.
ம.ஜ.த., தொண்டர்களிடம் தங்களின் வீடுகள், வசிக்கும் பகுதிகளில் கெம்பேகவுடா ஜெயந்தி நிகழ்ச்சி நடத்தும்படி கூறியுள்ளேன். கெம்பேகவுடா ஜெயந்தி நிகழ்ச்சி, அர்த்தமுடையதாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். கடந்த 500 ஆண்டுகளுக்கு முன், பெங்களூரை பற்றி அவர் கண்ட கனவு என்ன என்பதை ஆலோசிக்க வேண்டும்.
அவரது காலத்தில் உருவாக்கப்பட்ட ஏரிகளில், தற்போது எத்தனை ஏரிகள் உள்ளன. குறைந்தபட்ச ஏரிகளையாவது காப்பாற்றி பாதுகாக்க வேண்டும்.
நகரில் பெய்யும் மழை நீர், ஏரிகளுக்கு பாய்ந்து செல்லும்படி செய்தால், இந்த அரசுக்கு நான் சல்யூட் அடிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.