இறுதிப்போரின் நினைவு தினம்: இலங்கையில் பலத்த பாதுகாப்பு
இறுதிப்போரின் நினைவு தினம்: இலங்கையில் பலத்த பாதுகாப்பு
ADDED : மே 16, 2024 12:25 AM

கொழும்பு: இலங்கை போரின் 15வது நினைவு தினத்தில், உயிரிழந்த விடுதலைப்புலிகளை நினைவுகூரும் நிகழ்ச்சிகளை தடுக்க அந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில், தனிநாடு கேட்டு, 1983 முதல் புலிகள் அமைப்பினர் ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த அமைப்பின் தலைவராக பிரபாகரன் இருந்தார். இவர் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போட்டி அரசை நடத்தி வந்தார்.
இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையேயான போர் 2009ல் இறுதிக்கட்டத்தை எட்டியது. அதே ஆண்டு மே 19ல் புலிகள் தலைவர் பிரபாகரன் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார். அதன்பின் உள்நாட்டுப் போர் ஓய்ந்தது.
புலிகளின் இறுதிப் போரின் 15ம் ஆண்டு நினைவு தினம் நேற்றிலிருந்து 20ம் தேதி வரை நடக்க உள்ளதாக இலங்கை பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து புலிகளுக்கு ஆதரவான நிகழ்ச்சியில் பங்கேற்போர் கைது செய்யப்படுவர் என பாதுகாப்பு படையினர் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து பாதுகாப்பு படையினர் மேலும் கூறுகையில், 'இறுதிப் போரின் நினைவு நிகழ்ச்சிகளில் புலிகளுக்கு ஆதரவான நுால்கள் வினியோகிக்கப்படுகின்றன.
'புலிகளுக்கு புத்துயிர் ஊட்டுவது குறித்தும் சில நிகழ்ச்சிகளில் பேசியுள்ளனர். இதுகுறித்து பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்' என கூறினர்.