ADDED : ஆக 10, 2024 06:17 AM
பெங்களூரு: விவசாயிகள் பெயரில் பண மோசடி நடந்தது தொடர்பாக, கே.ஐ.ஏ.டி.பி., எனும் கர்நாடக தொழில் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில், அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
கர்நாடக தொழில் பகுதி மேம்பாட்டு ஆணையம், புதிதாக தொழிற்பேட்டைகள் அமைக்க விவசாயிகளிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்தி, அவர்களுக்கு இழப்பீடு வழங்கும் பணியை செய்கிறது.
தார்வாட் காமனஹட்டி பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க, 2012ல் 14 விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதற்கு இழப்பீடும் வழங்கப்பட்டது.
ஆனால் 2021ல், விவசாயிகள் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்தும், வங்கிக் கணக்குகள் துவங்கியும் 20 கோடி ரூபாயை அதிகாரிகள் சுருட்டியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விவசாயிகள் அளித்த புகாரில், வித்யாகிரி போலீசார் 14 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
போலி வங்கிக் கணக்கு துவங்கியது தொடர்பாக, ஐ.டி.பி.ஐ., வங்கி அளித்த புகாரில், சி.பி.ஐ.,யும் விசாரித்தது. சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்திருப்பது தெரிந்ததால், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில் பெங்களூரு ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள, கர்நாடக தொழில் பகுதி மேம்பாட்டு ஆணைய தலைமை அலுவலகத்தில், அமலாக்கத் துறையினர் நேற்று திடீரென சோதனை நடத்தினர். அதிகாரிகள் சிலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. சில முக்கிய ஆவணங்களையும், அமலாக்கத் துறை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

