ADDED : ஆக 29, 2024 02:38 AM

பல்லாரி, : வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் நாகேந்திரா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
கர்நாடக பழங்குடியினர் நலத் துறைக்கு உட்பட்ட, வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் 94 கோடி ரூபாய் முறைகேடு நடந்தது பற்றி, அமலாக்கத்துறை விசாரிக்கிறது.
இந்த வழக்கில் பழங்குடியினர் நலத்துறை முன்னாள் அமைச்சர் நாகேந்திரா கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக பெங்களூரு, பல்லாரியில் உள்ள நாகேந்திராவின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருந்தது.
இந்நிலையில், நேற்று காலை 8:00 மணி முதல், பல்லாரியில் உள்ள நாகேந்திராவின் வீடு, கொப்பால், ராய்ச்சூரில் உள்ள அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது சில ஆவணங்களை அதிகாரிகள், பறிமுதல் செய்து எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணிகளை, அமலாக்கத்துறை ஆரம்பித்துள்ளது. இதனால் நாகேந்திராவுக்குச் சொந்தமான இடங்களில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.

