ADDED : ஜூன் 01, 2024 06:35 AM

ஷிவமொகா: தற்கொலை செய்து கொண்ட வால்மீகி மேம்பாட்டு ஆணைய சூப்பிரண்டு சந்திரசேகர் குடும்பத்திற்கு, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா ஆறுதல் கூறினார். 3 லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கினார்.
பெங்களூரில் வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் சூப்பிரண்டாக வேலை செய்தவர் சந்திரசேகர், 52. ஷிவமொகா வினோபா நகரில் உள்ள வீட்டில், சமீபத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.
இந்நிலையில் சந்திரசேகர் வீட்டிற்கு, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா நேற்று சென்றார். சந்திரசேகரின் மனைவி கவிதாவிற்கு ஆறுதல் கூறியதுடன், 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் கொடுத்தார்.
ரூ.50 லட்சம்
பின்னர் ஈஸ்வரப்பா அளித்த பேட்டி:
நேர்மையான அதிகாரி சந்திரசேகர் தற்கொலை செய்தது வருத்தம் அளிக்கிறது. பெரிய பதவியில் இருந்தாலும் நேர்மையாக பணியாற்றியதால், அவரிடம் நிறைய பணம் இல்லை. பிள்ளைகளை படிக்க வைக்க, மனைவியின் நகைகளை அடகு வைத்து உள்ளார். இதனால் என்னால் முடிந்த உதவியாக, 3 லட்சம் ரூபாய் கொடுத்து உள்ளேன்.
கர்நாடக அரசு சந்திரசேகர் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும்.அரசு பணம் கொடுக்கா விட்டால், ஷிவமொகா நகரில் வீடு, வீடாக சென்று பணம் வசூலித்து நாங்கள் கொடுப்போம்.
அமைச்சர்கள் தவறு
தங்கள் துறையில் ஊழல் நடந்தால், அதிகாரிகள் வெளியே கொண்டு வர வேண்டும். தற்கொலை செய்ய கூடாது. கான்ட்ராக்டர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை வழக்கில், என் பெயர் அடிபட்டதால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேன்.
தற்கொலை செய்தசந்திரசேகர் மரண கடிதத்தில், அமைச்சரின் வாய்மொழி உத்தரவின்படி பண பரிமாற்றம் நடந்ததாக கூறி உள்ளார்.
இதனால் அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா செய்ய வேண்டும். அவர் பதவி விலகும் வரை போராட்டம் நடக்கும். ஒருவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், அனைத்து அமைச்சர்களும் தவறு செய்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.