ADDED : ஜூலை 30, 2024 01:21 AM
புதுடில்லி, டீசல் உடன் எத்தனால் கலப்பது சோதனை கட்டத்தில் இருப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின் போது, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது:
கச்சா எண்ணெய் இறக்குமதி செலவுகள் மற்றும் கார்பன் உமிழ்வை குறைக்கும் நோக்கத்தில், பெட்ரோலுடன் 1.4 சதவீதம் எத்தனால் கலக்கும் முறை 2014ல் துவங்கியது. தற்போது 15 சதவீதம் அளவுக்கு பெட்ரோலுடன் எத்தனால் கலக்கும் நிலையை நாம் எட்டியுள்ளோம்.
தற்போது, 400 கோடி லிட்டர் எத்தனால் கலக்கப்படுகிறது. 2025 இறுதிக்குள் இதை 1,000 கோடி லிட்டராக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
டீசலுடன் எத்தனால் கலக்கும் நடைமுறை சோதனை கட்டத்தில் உள்ளது.
அது வாகனத்தில் பாதிப்பு ஏற்படாதபடி பாதுகாப்பு மற்றும் பொருந்தக்கூடிய தன்மையை நாம் முழுமையாக பரிசோதிக்க வேண்டும்.
எனவே, இன்னும் பல கட்ட பரிசோதனைகளை கடக்க வேண்டிய நிலை இருப்பதால், அதை நடைமுறைப்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை.
எத்தனால் உற்பத்தியை பொறுத்தவரை, நாடு முழுதும் பல்வேறு மாநிலங்களிலும் 1,364 கோடி லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. கலப்பு இலக்குகளை சந்திக்க தேவையான எத்தனாலை உற்பத்தி செய்ய இந்த திறன் போதுமானது.
இவ்வாறு அவர் கூறினார்.

