'கடவுளே இறங்கி வந்தாலும் பெங்களூரு போக்குவரத்து நெரிசலை தீர்க்க முடியாது'
'கடவுளே இறங்கி வந்தாலும் பெங்களூரு போக்குவரத்து நெரிசலை தீர்க்க முடியாது'
ADDED : பிப் 22, 2025 03:44 AM

பெங்களூரு : ''பெங்களூரில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை, கடவுளே இறங்கி வந்தாலும் ஒரே இரவில் தீர்க்க முடியாது,'' என, கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரில் சாலை, நடைபாதையை மேம்படுத்துவது தொடர்பாக, மூன்று நாட்கள் நடக்கும் பயிற்சி முகாம் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று துவங்கியது.
இதில், துணை முதல்வரும், காங்., மூத்த தலைவருமான சிவகுமார் பேசியதாவது:
எதிர்காலத்தில் பெங்க ளூரு சாலைகள் நன்றாக இருக்க வேண்டும். இதற்காக, நாம் இப்போது இருந்தே திட்டமிட வேண்டும். இல்லாவிட்டால், நகரை நாம் ஏமாற்றியது போன்று ஆகிவிடும். சாலை, நடைபாதை, பசுமை மண்டலங்களில் சீரான தன்மை அறியப்பட வேண்டும்.
மேலே உள்ள கடவுள் இறங்கி வந்தாலும், பெங்களூரை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் முழுமையாக மாற்ற முடியாது. பெங்களூரின் போக்குவரத்து பிரச்னையை ஒரே இரவில் தீர்க்க முடியாது. ஆனால் திட்டங்களை முறையாக வடிவமைத்து செயல்படுத்தினால் அனைத்தும் சாத்தியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவகுமாரின் இந்த பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பெங்களூரு நகரை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றுவோம் என கூறிய சிவகுமார், தற்போது அதற்கு நேர் மாறாக கருத்து தெரிவித்துள்ளது, ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
'பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவர் என்ற நம்பிக்கையில் ஓட்டளித்த மக்களுக்கு, சிவகுமாரின் பேச்சு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது' என, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்துஉள்ளனர்.

