நீதித்துறைக்கு எதிரான செயல்கள் முன்னாள் நீதிபதிகள் வருத்தம்
நீதித்துறைக்கு எதிரான செயல்கள் முன்னாள் நீதிபதிகள் வருத்தம்
ADDED : ஏப் 16, 2024 12:31 AM
புதுடில்லி, 'குறிப்பிட்ட சில பிரிவினர் நீதித்துறையின் மதிப்பை குறைக்கும் வகையில், பொய் தகவல்கள் வெளியிடுவது, சமூக வலைதளங்களில் விமர்சிப்பது என, பல நெருக்கடிகள் தருகின்றனர்' என, 21 முன்னாள் நீதிபதிகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் தீபர் வர்மா, கிருஷ்ண முராரி, தினேஷ் மகேஷ்வரி, எம்.ஆர்.ஷா மற்றும் 17 உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் இணைந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது:
சில குறிப்பிட்ட அரசியல் நோக்கம் மற்றும் தனிநபர் நலனுக்காக, நீதித் துறை மீதான மக்களின் நம்பிக்கையை குறைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு நேர்மையாக செயல்படும் நீதித்துறையினர் கடும் நெருக்கடியில் உள்ளனர். நீதிமன்ற உத்தரவுகள், தீர்ப்புகள் குறித்து, அவற்றின் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் பொதுவெளியில் சிலர் விமர்சிக்கின்றனர்.
சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றில் பொய் தகவல்களை வெளியிடுவது என, நீதித்துறையின் மரியாதையை சீர்குலைப்பதற்கு திட்டமிட்ட சதி நடப்பதாக தெரிகிறது. இதுபோன்ற நெருக்கடிகளில் இருந்து நீதித்துறையை காப்பாற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எந்த ஒரு குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாகவும், இந்த கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை.
இதற்கிடையே, இந்த 21 நீதிபதிகளின் கடிதத்தின் பின்னணியில் பா.ஜ., இருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

