முன்னாள் அமைச்சர் பெயர் வால்மீகி வழக்கில் 'மிஸ்ஸிங்'
முன்னாள் அமைச்சர் பெயர் வால்மீகி வழக்கில் 'மிஸ்ஸிங்'
ADDED : ஆக 06, 2024 02:46 AM
பெங்களூரு, கர்நாடகாவில், வால்மீகி ஆணைய முறைகேடு தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு, 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. முறைகேட்டில் தொடர்புடையதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் நாகேந்திரா, ஆணையத்தின் தலைவர் பசனகவுடா தத்தலின் பெயர்கள் அதில் இல்லை.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் 87 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. ஆணையத்தின் பணம், சட்டவிரோதமாக வேறு கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்திருப்பதும், லோக்சபா தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டதும் தெரிந்தது.
இது குறித்த விசாரணை, எஸ்.ஐ.டி., எனும் மாநில அரசின் சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. பல கோடி ரூபாய் முறைகேடு என்பதால், அமலாக்கத்துறையும் விசாரணை நடத்துகிறது. வால்மீகி ஆணையம் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுகள் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. எனவே, துறை அமைச்சர் நாகேந்திரா, பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே முதல் கட்ட விசாரணையை முடித்த எஸ்.ஐ.டி., அதிகாரிகள், பெங்களூரு நீதிமன்றத்தில் நேற்று முதல் கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 3,000 பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிகையில், முன்னாள் அமைச்சர் நாகேந்திரா, வால்மீகி மேம்பாட்டு ஆணைய தலைவரான காங்., - எம்.எல்.ஏ., பசனகவுடா தத்தலின் பெயர்கள் இல்லை.
வழக்கு தொடர்பாக, 16.83 கோடி ரூபாய் ரொக்கம், 11.70 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், 4.51 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போகினி கார் உட்பட 50 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டதை, குற்ற பத்திரிகையில் விவரித்துள்ளனர்.
முறைகேட்டில் கைதான, ஹைதராபாதின் சத்ய நாராயண வர்மா, வால்மீகி ஆணைய நிர்வாக இயக்குனர் பத்மநாபன், கணக்கு அதிகாரி பரசுராம், செக்யூரிட்டி நாகராஜ், இவரது உறவினர் நாகேஸ்வர ராவ் உட்பட 12 பேரின் பெயர்கள் மட்டுமே குற்றப்பத்திரிகையில் உள்ளன.
அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட நாகேந்திரா, பசனகவுடா தத்தல் பெயர்கள் இல்லாதது, பலவித சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.