ராஜ்யசபாவை 92 மணி நேரம் வழிநடத்திய சிபிஆர்; பல்வேறு தரப்பினரும் பாராட்டு
ராஜ்யசபாவை 92 மணி நேரம் வழிநடத்திய சிபிஆர்; பல்வேறு தரப்பினரும் பாராட்டு
UPDATED : டிச 19, 2025 05:07 PM
ADDED : டிச 19, 2025 03:16 PM

புதுடில்லி: ராஜ்யசபாவை முதல்முறையாக வழி நடத்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனின் செயல்பாடு பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்று இருக்கிறார். அவர், ராஜ்யசபாவை 92 மணி நேரம் நடத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
பார்லிமென்ட் குளிர்க்கால கூட்டத்தொடர் இன்றுடன் (டிசம்பர் 19) நிறைவு அடைந்தது. இரு அவைகளும் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இதன் மூலம் 19 நாட்கள் நடைபெற்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று நிறைவடைந்தது. முதலில் லோக்சபாவை கால வரையின்றி ஒத்திவைத்த சபாநாயகர் ஓம்பிர்லா நிறைவு உரையில்,''அவையின் செயல்பாடு 111 சதவீதம். மொத்தம் 15 அமர்வுகள் நடைபெற்றது. அவையின் சுமூகமான செயல்பாட்டிற்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து எம்பிக்களுக்கும் நன்றி, என்றார்.
அதைத் தொடர்ந்து ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது. அவை தலைவர் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தனது நிறைவுரையில் கூறியதாவது: அவை 92 மணி நேரம் செயல்பட்டது. அவையின் செயல்பாடு 121 சதவீதம். இந்தக் கூட்டத்தொடரின் போது 59 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதங்கள் நடந்தது. வந்தே மாதரம் பாடல் 150வது ஆண்டு நிறைவையொட்டி அவையில் ஒரு சிறப்பு விவாதம் நடத்தப்பட்டது.
இந்த விவாதத்தில் 82 எம்பிக்கள் பங்கேற்றனர். தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்தும் அவையில் ஒரு விவாதம் நடத்தப்பட்டது. அதில் 57 உறுப்பினர்கள் நாட்டின் ஜனநாயக செயல்முறையை வலுப்படுத்துவது குறித்த தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். நேற்றைய அமர்வின் போது எதிர்க்கட்சி எம்பிக்களால் உருவாக்கப்பட்ட இடையூறுகள் கவலை அளிக்கிறது.
முழக்கமிடுவது, பதாகைகளைக் காண்பிப்பது, விவாதத்திற்குப் பதிலளிக்கும் அமைச்சருக்கு இடையூறு செய்வது, காகிதங்களைக் கிழித்து அவையின் மையப்பகுதியில் வீசுவது ஆகியவற்றை எம்பிக்கள் எதிர்க்காலத்தில் செய்யக் கூடாது. இதுபோன்ற ஒழுங்கற்ற நடத்தைகளை மீண்டும் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
முதல்முறை அசத்தல்
முதல்முறையாக அவையை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நடத்தியதால், கூட்டத்தொடர் முழுவதும் பல்வேறு தரப்பினர் உன்னிப்பாக கவனித்தனர். குறிப்பாக சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு அவையில் பாராட்டுக்களை பெற்றது. தற்போது சிறப்பாக அவையை நடத்தி, சி.பி.ராதாகிருஷ்ணன் அசத்தி இருக்கிறார்.

