அடிப்படை ஆதாரமற்ற புகார்... ரூ.60 கோடி மோசடி வழக்கிற்கு ஷில்பா ஷெட்டி பதில்
அடிப்படை ஆதாரமற்ற புகார்... ரூ.60 கோடி மோசடி வழக்கிற்கு ஷில்பா ஷெட்டி பதில்
ADDED : டிச 19, 2025 02:12 PM

மும்பை: ரூ.60 கோடி மோசடி வழக்கில் தன்னை தொடர்புபடுத்தும் அடிப்படை ஆதாரமற்ற புகார் தன்னை மிகவும் வேதனை அடையச் செய்வதாக நடிகை ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர், 'பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர். வர்த்தகத்தை விரிவு படுத்துவதாக கூறி, மும்பை வர்த்தகர் தீபக் கோத்தாரியிடம் கடந்த 2015 முதல் 2023 வரை 60 கோடி ரூபாயை ஷில்பா பெற்றுள்ளார்.
கடனாக பெற்ற இந்த தொகையை, வரி சேமிப்பு என்ற பெயரில் ஷில்பா தம்பதி முதலீடாக காட்டியுள்ளனர். மேலும் அவ்வாறு பெற்ற பணத்தை தங்கள் சொந்த செலவுக்கு பயன்படுத்தியுள்ளனர். இதையடுத்து, பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றிய ஷில்பா ஷெட்டி தம்பதி மீது மும்பை போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸூம் பிறப்பிக்கப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த நடிகை ஷில்பா தம்பதி, இது அவதுாறு பரப்பும் நோக்கில் தங்கள் மீது போடப்பட்ட அடிப்படை ஆதாரமற்ற வழக்கு என்றனர்.
இந்த நிலையில், மோசடி விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தும் அடிப்படை ஆதாரமற்ற முயற்சி தன்னை மிகவும் வேதனை அடையச் செய்வதாக நடிகை ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை; மோசடி விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தும் அடிப்படை ஆதாரமற்ற முயற்சி, எனக்கு வேதனையளிக்கிறது. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் செயல்பாடுகள், நிதி, முடிவெடுக்கும் அதிகாரம் அல்லது எந்தவொரு கையெழுத்து அதிகாரமும் எனக்கு கிடையாது. பிற பிரபலங்களைப் போல, வீட்டு உபயோகப் பொருட்களின் விளம்பர சேனலில் நடித்தேன். அதற்கு எனக்கு கொடுக்க வேண்டிய தொகை இன்னும் நிலுவையில் உள்ளது. அந்த நிறுவனத்திற்கு சுமார் ரூ.20 கோடி கடனாக வழங்கியுள்ளோம். அந்தத் தொகை இன்னும் திருப்பி கொடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக எந்த விளக்கமும் கொடுக்கப்படாமல், சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு, என்மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. என் மீதான இந்தக் குற்றச்சாட்டு சட்டப்பூர்வமாக நிருபிக்கப்பட முடியாதது. உண்மைகள் இருந்தும், என் பெயர் தேவையில்லாமல் இந்த மோசடி வழக்கில் இணைக்கப்படுவது மிகவும் வேதனைக்குரியதும், நியாயமற்றதுமாகும்.
இதுபோன்ற தேவையில்லாத குற்றச்சாட்டுகள் உண்மைகளை தவறாக சித்தரிப்பதுடன், ஒரு பெண்ணின் கண்ணியம், நேர்மை மற்றும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறது. பகவத் கீதையில் கூறப்பட்டிருப்பது போல், 'அநீதிக்கு எதிராக நிற்கும்போது, அதை எதிர்க்கத் தவறுவதே அதர்மமாகும்.' நீதித்துறை செயல்பாடுகளில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. உண்மைகளை அறிந்து பொறுப்புடன் செய்திகளை ஊடகங்கள் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

