ADDED : ஜூலை 03, 2024 10:26 PM
பெங்களூரு : கர்நாடக அரசின், 'கிரஹஜோதி' திட்டத்தின் விளைவாக, மின் வாரியத்தின் கருவூலம் காலியாகி உள்ளது. தற்போது நிதியுதவி கேட்டு, நிதித்துறை முன்பாக கையேந்தி நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் ஆட்சி நடத்தி வரும் காங்கிரஸ் அரசு, ஐந்து வாக்ககுறுதி திட்டங்கள் மூலம், மக்களின் மனதை ஈர்த்தது. கொடுத்த வாக்குறுதிப்படி, ஒவ்வொரு திட்டமாக செயல்படுத்தியது. இவற்றில், 'கிரஹஜோதி' திட்டமும் ஒன்றாகும்.
இத்திட்டப்படி, மக்கள் மாதந்தோறும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் பயன்படுத்தலாம். இந்த திட்டத்தால், மின்வாரியத்தின் கருவூலம் காலியாகி உள்ளது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, நிதித் துறையிடம் கையேந்துவதாக கூறப்படுகிறது. சூழ்நிலையை சமாளிக்க 5,257 கோடி ரூபாய் நிதியுதவி கோரியுள்ளது.
இநு தொடர்பாக, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் மின் துறை அமைச்சர் ஜார்ஜ் கூறியிருப்பதாவது:
பா.ஜ., ஆட்சியில், சரியாக மின் கட்டண பில்களை வசூலிக்கவில்லை. இதனால் எஸ்காம்களுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது.
பா.ஜ., அரசு, கருவூலத்தை காலி செய்துள்ளது. எஸ்காம்களை கடன் சுழலில் தள்ளிவிட்டது. இதற்கான பின் விளைவை, நாங்கள் சந்திக்கிறோம்.
கடந்த ஆறு, ஏழு ஆண்டுகளாக, பல்வேறு அரசு துறைகள், எஸ்காம்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் பில் கட்டணம் பாக்கி வைத்துள்ளன.
இதுவும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாகிறது. இப்போது எங்கள் அரசு, எஸ்காம்களின் உதவிக்கு வந்துள்ளது. ஆனால் இதற்கு பா.ஜ., முட்டுக்கட்டை போடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.