கொட்டும் மழையிலும் டாக்டர்கள் போராட்டம் மம்தாவுடன் பேச்சு நடத்தாதது குறித்து விளக்கம்
கொட்டும் மழையிலும் டாக்டர்கள் போராட்டம் மம்தாவுடன் பேச்சு நடத்தாதது குறித்து விளக்கம்
UPDATED : செப் 16, 2024 12:35 AM
ADDED : செப் 15, 2024 11:52 PM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் டாக்டர் மரணத்துக்கு நீதி கேட்டு, மழையையும் பொருட்படுத்தாமல் பயிற்சி டாக்டர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த 31 வயதான பயிற்சி பெண் டாக்டர், ஆக., 9ல், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில், போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கிறது.
ஏற்கவில்லை
எனினும், கோல்கட்டா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல், சுகாதார செயலர் என்.எஸ்.நிகாம் ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்; பெண் டாக்டருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோல்கட்டாவின் சால்ட் லேக் என்ற பகுதியில், சுகாதார துறை தலைமை அலுவலகம் முன் போராட்டம் நடத்தி வரும் பயிற்சி டாக்டர்களை, முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் சந்தித்து போராட்டத்தை கைவிடும்படி வலியுறுத்தினார். இதை அவர்கள் ஏற்கவில்லை.
இந்நிலையில், சுகாதார துறை தலைமை அலுவலகம் முன்பு, தொடர்ந்து ஆறாவது நாளாக நேற்றும், பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரபரப்பு
இது குறித்து பயிற்சி டாக்டர்கள் கூறுகையில், 'உயிரிழந்த எங்கள் தோழிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். எங்களில் பலருக்கு உடல்நிலை சரியில்லை.
'எனினும், மக்களின் நலன் கருதி போராட்டத்தை தொடர்கிறோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்' என்றனர்.
இதற்கிடையே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி அபிஜித் மொண்டலை, சி.பி.ஐ., அதிகாரிகள் மருத்துவப் பரிசோதனைக்கு நேற்று காலை அழைத்துச் சென்ற போது, சி.பி.ஐ., அலுவலகம் முன், பயிற்சி டாக்டர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.