UPDATED : ஏப் 27, 2024 02:04 AM
ADDED : ஏப் 27, 2024 02:03 AM

புதுடில்லி :டில்லியில் விமானி உடை அணிந்து, சர்வதேச விமான நிலையத்தில் வலம் வந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த, 24 வயது இளைஞரை துணை ராணுவப் படையினர் நேற்று கைது செய்தனர்.
டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், நாள்தோறும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றன.
தலைநகரின் முக்கியமான பகுதி என்பதால், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கு விமானி போல் உடையணிந்து வலம் வந்த இளைஞரை, விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த துணை ராணுவத்தினர் நேற்று கைது செய்தனர்.
விசாரணையில், அவர் உத்தர பிரதேசத்தில் உள்ள கவுதம் புத்தா நகரைச் சேர்ந்த சங்கீத் சிங் என, தெரியவந்தது.
கடந்த 2020ல் விமான விருந்தோம்பல் தொடர்பான படிப்பை முடித்த அவர், குடும்பத்தினரை ஏமாற்றுவதற்காக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களை இயக்கும் விமானி போல் நடித்ததும் தெரியவந்தது.
விமானிக்கான உடையை டில்லியில் உள்ள துவாரகாவில் அவர் வாங்கியதாக துணை ராணுவத்தினர் தெரிவித்தனர்.
தனியார் விமான நிறுவன அடையாள அட்டையை போலியாக உருவாக்கி, அவர் அணிந்து வந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், விமானங்களை இயக்குவதற்கான உரிமம் உள்ளிட்ட சான்றிதழ் எதுவுமின்றி அவர் போலியாக உலவியது தெரியவந்தது.

