பா.ஜ.,வின் ஓட்டு வித்தியாசம் குறித்து சமூக ஊடகங்களில் பொய் தகவல்
பா.ஜ.,வின் ஓட்டு வித்தியாசம் குறித்து சமூக ஊடகங்களில் பொய் தகவல்
ADDED : ஜூன் 07, 2024 11:23 PM

புதுடில்லி: பா.ஜ., 100 இடங்களில், 1,000க்கும் குறைவான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் போலியானது என்பது தெரியவந்து உள்ளது.
ஓட்டு எண்ணிக்கை
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், மொத்தமுள்ள 543 இடங்களில், தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. பா.ஜ., தனியாக 240 இடங்களை பெற்றுள்ளது.
இந்நிலையில், பா.ஜ., 30 இடங்களில் 500க்கும் குறைவான ஓட்டுகள் வித்தியாசத்திலும், 100 இடங்களில் 1,000க்கும் குறைவான ஓட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதை, காங்கிரஸ் கட்சியினர் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தனர். இந்த 130 தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அவற்றை கழித்தால் பா.ஜ.,வுக்கு 110 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் கூறினர்.
இது குறித்து, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் சில அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.
இந்த புள்ளிவிபரங்களை தேர்தல் கமிஷன் இணையதளத்தில் வெளியாகியுள்ள ஓட்டு விபரங்களுடன் ஒப்பிட்டபோது, அந்த தகவல் போலியானது என்பது தெரியவந்துள்ளது.
வெற்றி
ஒடிசாவின் ஜாஜ்புர் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றுள்ள ரவீந்திர நாராயண் பெஹெரா, மிகக் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ., வேட்பாளர் என அறிவிக்கப் பட்டுள்ளார்.
இவர், 1,587 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதை விட குறைவான ஓட்டுகள் வித்தியாசத்தில் வேறு எந்த பா.ஜ., வேட்பாளரும் வெற்றி பெறவில்லை.
இவருக்கு அடுத்தபடியாக, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் 1,615 ஓட்டுகள் வித்தியாசத்தில் பா.ஜ., வேட்பாளர் ராவ் ராஜேநந்திர சிங் வெற்றி பெற்றுள்ளார்.
மஹாராஷ்டிராவின் மும்பை வடமேற்கு லோக்சபா தொகுதியில், சிவசேனாவின் ரவீந்திர தத்தாராம் வாய்கர், 48 ஓட்டுகள் வித்தியாசத்தில் சிவசேனா உத்தவ் பிரிவு வேட்பாளரை தோற்கடித்துள்ளார்.
ஒட்டு மொத்தத்தில் மிகவும் குறைவான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளராக இவர் அறியப்படுகிறார்.