விவசாயி அவதாரமெடுத்த சிறார்கள் அற்புதமான தோட்டம் அமைப்பு
விவசாயி அவதாரமெடுத்த சிறார்கள் அற்புதமான தோட்டம் அமைப்பு
ADDED : ஆக 03, 2024 11:19 PM

மலைக் கிராமத்தின் சிறிய பள்ளியில் படிக்கும் மாணவர்கள், விவசாயிகளாக அவதாரம் எடுத்துள்ளனர். தங்கள் உணவுக்கு வேண்டிய காய்கறிகளை, தாங்களே பயிரிடுகின்றனர். இதற்காக பள்ளி வளாகத்தில், அற்புதமான தோட்டத்தை உருவாக்கி உள்ளனர்.
உத்தரகன்னடா முன்டகோடாவின் எல்லாபுரா ரோட்டில் பாளெஹள்ளி என்ற மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பஸ் வசதி இல்லை. சரியான ரோடுகள், அடிப்படை வசதிகள் இல்லை. ஆனால் கிராமம், மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்கு இங்குள்ள பள்ளியே, முக்கிய காரணம்.
பாளெஹள்ளியில் உள்ள தொடக்கப்பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 26 மாணவர்கள் படிக்கின்றனர். சிறிய கட்டடத்தில் பள்ளி இயங்குகிறது.
இங்கு இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 2023ல் ஆசிரியர் மல்லிகார்ஜுன் பஜந்த்ரி, கிராமத்தின் இளைஞர்களின் உதவியுடன், பள்ளி சுற்றுப்பகுதியில் அடைத்து கிடந்த முட்புதர்களை அகற்றினார்.
இந்த இடத்தை பதப்படுத்தினார். இங்கு மாணவர்களை விவசாயம் செய்ய ஊக்கப்படுத்தினார். தோட்டத்தை உருவாக்கினார். மாணவர்களின் கை வண்ணத்தில் இந்த தோட்டம் 'இந்திர வனம்' போன்று மாறியுள்ளது.
தக்காளி, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், மஞ்சள், கரும்பு, வாழைப்பழம், செண்டுப்பூ, மல்லிகை, மிளகு என, காய்கறிகள், கீரைகள், பழங்கள், பூக்களை பயிரிட்டுள்ளனர்.
தக்காளி, கத்திரிக்காய் என, பல காய்கறிகள் ஏற்கனவே அமோகமாக விளைந்தன. வாழையும் நன்றாக விளைந்துள்ளது. 16 குலைகள் அறுவடை செய்யப்பட்டன.
காய்கறிகள் பள்ளி மதிய உணவு தயாரிக்க பயன்படுகின்றன. உணவுக்கு பயன்படுத்தியது போக, மிச்சமுள்ள காய்கறிகளை மாணவர்கள் தங்கள் வீட்டுக்கு கொண்டு செல்கின்றனர்.
தோட்டத்துக்கு தேவையான உரம், விதை பொருட்களை ஆசிரியர், தன் சொந்த பணத்தில் வாங்கித் தருகிறார். ரசாயனம் இல்லாமல், 100 சதவீதம் இயற்கையான முறையில் காய்கறிகள் விளைகின்றன. காட்டுப்பகுதியின், மலைக் கிராமத்தில் பள்ளி அமைந்துள்ளதால், தோட்டம் அவ்வளவாக வெளிச்சத்துக்கு வரவில்லை.
பாளெஹள்ளி கிராமத்தின் பள்ளி, மற்ற பள்ளிகளுக்கு முன் உதாரணமாக உள்ளது.
வளரும் பருவத்திலேயே, மாணவர்களுக்கு விவசாயத்தின் மகத்துவத்தை உணர்த்துகிறது
- நமது நிருபர் -.