ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் புத்தகம் பார்த்து தேர்வு எழுதலாம்: சி.பி.எஸ்.இ., புது முடிவு
ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் புத்தகம் பார்த்து தேர்வு எழுதலாம்: சி.பி.எஸ்.இ., புது முடிவு
UPDATED : ஆக 12, 2025 01:59 PM
ADDED : ஆக 12, 2025 01:22 AM

சென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., அடுத்த கல்வியாண்டு முதல், 9ம் வகுப்பு மாணவர்கள் புத்தகத்தை பார்த்து, தேர்வு எழுத அனுமதி அளித்துள்ளது.
சி.பி.எஸ்.இ., 'தேசிய கல்வி கொள்கை - 2020' மற்றும் என்.சி.எப்.எஸ்.இ., எனப்படும், கல்வி கொள்கைக்கான தேசிய பாடத்திட்டம் கட்டமைப்பு பரிந்துரையின்படி, கற்றல் மேம்பாட்டு செயல்முறைகளை அறிமுகம் செய்து வருகிறது. மாணவர்கள் மனப்பாடம் செய்து, கல்வி கற்கும் சூழலை மாற்றி, சிந்தித்து படிக்கும் அம்சங்களை, தேசிய கல்வி கொள்கை - 2020 வழங்குகிறது.
அத்துடன், மாணவர்களின் தேர்வு பயத்தை போக்க, புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் முறையை வலியுறுத்துகிறது. இந்த தேர்வு முறையை, சி.பி.எஸ்.இ., தேர்வு வாரியம், கடந்த 2014ல் நடைமுறைப்படுத்தியது. அப்போது, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஹிந்தி, ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள்; பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொருளாதாரம், உயிரியல், புவியியல் பாடங்களுக்கான தேர்வுகள், திறந்த புத்தக தேர்வு முறையில், நடத்தப்பட்டன.
ஆனால், 2017 - 18ம் கல்வியாண்டில், இத்தேர்வு முறை நிறுத்தப்பட்டது. மீண்டும் பழைய தேர்வு முறையே அமல்படுத்தப்பட்டது.
இதற்கிடையில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்ற, இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்களில், புத்தகத்தை பார்த்து தேர்வுகளை நடத்த அனுமதி வழங்கப் பட்டது.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ., கல்வி வாரியத்தின் நிர்வாகக் குழு கூட்டம், கடந்த ஜூன் மாதம் டில்லியில் நடந்தது. இக்கூட்டத்தில், சி.பி.எஸ்.இ., 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, 2026 -27ம் கல்வியாண்டு முதல், புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் முறையை அமல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு, திறந்த புத்தக தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
ஆனால், இந்த தேர்வு முறை கட்டாயம் அல்ல. விருப்பம் உள்ள பள்ளிகள் நடத்திக் கொள்ளலாம் என, சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. இப்புதிய தேர்வு முறைக்கு, மாதிரி வினாத்தாள், விரிவான வழிகாட்டுதல்களை, சி.பி.எஸ்.இ., வழங்கும்.
இது குறித்து தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் நந்தகுமார் கூறுகையில், ''தேசிய கல்வி கொள்கையின் அம்சமான, புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் முறையை, சி.பி.எஸ்.இ., 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அமல்படுத்தும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. மாணவர்களின் சிந்தனை திறனை, இந்த தேர்வு முறை வளர்க்கும். புத்தகத்தை நன்றாக படித்த மாணவர்கள் மட்டுமே, இந்த தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள முடியும். சிந்திக்க வைக்கும் வகையில் கேள்விகள் இடம் பெறும்; இது, நல்ல திட்டம்,'' என்றார்.
இது குறித்து, அமைச்சர் மகேஷிடம், திருச்சியில் செய்தியாளர்கள் கேட்டதற்கு,''புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினால் அறிவு வளருமா,'' என, கேட்டு விட்டு, புறப்பட்டு சென்றார்.