குடிநீர் வாரிய தலைவருடன் விவசாய சங்கத்தினர் சந்திப்பு
குடிநீர் வாரிய தலைவருடன் விவசாய சங்கத்தினர் சந்திப்பு
ADDED : மே 09, 2024 05:22 AM

பெங்களூரு : ஹெசருகட்டா ஏரியை மேம்படுத்துவது தொடர்பாக, குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகரை, விவசாய சங்கத்தினர் சந்தித்துப் பேசினர்.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை.
இதனால் தற்போது பெங்களூரு உட்பட பல மாவட்டங்களில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டு உள்ளது. பெங்களூரில் பணம் கொடுத்து டேங்கர் தண்ணீர் வாங்கும் நிலைக்கு, மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
குடிநீர் பிரச்னையை தீர்க்க பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியமும், பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தாசரஹள்ளி, சோழதேவனஹள்ளி பகுதியில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
வண்டல் மண்
இதை சரிசெய்ய ஹெசருகட்டா ஏரியில் இருந்து, 0.05 டி.எம்.சி., தண்ணீர் எடுக்க, குடிநீர் வாரியம் முடிவு செய்து உள்ளது. ஆனால் இதற்கு ஹெசருகட்டா ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகரை, விவசாயிகள் சங்கத்தினர் நேற்று சந்தித்துப் பேசினர்.
அப்போது விவசாயிகள் சங்க தலைவர் அரபுரா மஞ்சேகவுடா பேசுகையில், ''ஹெசருகட்டா ஏரியால் அதை சுற்றியுள்ள கிராமங்கள் பயன் அடைக்கின்றன. பறவைகளும் இந்த ஏரியின் தண்ணீரை நம்பி உள்ளன. ஏரியில் வண்டல் மண் நிரம்பி இருப்பதால், அதிக அளவில் தண்ணீரை சேமிக்க முடியவில்லை. ஏரியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தாசரஹள்ளிக்கு ஏரி தண்ணீர் வழங்க கூடாது,'' என்றார்.
திட்ட அறிக்கை
இந்த சந்திப்புக்கு பின்னர், குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் கூறியதாவது:
தாசரஹள்ளியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க, ஹெசருகட்டா ஏரி தண்ணீர் பயன்படுத்த முடிவு செய்து இருந்தோம். ஆனால் ஏரி தண்ணீரை பயன்படுத்த வேண்டாம் என்று, விவசாய சங்கத்தினர் கோரிக்கை வைத்து உள்ளனர்.
அவர்களிடம் மீண்டும் விவாதித்து இறுதி முடிவு எடுப்போம். எதிர்காலத்திற்கு பயன் அளிக்கும் வகையில், ஹெசருகட்டா ஏரியை மேம்படுத்துவது குறித்து, அரசிடம், திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.