10 ஆண்டுகள் மகளை சீரழித்த தந்தைக்கு சாகும் வரை சிறை
10 ஆண்டுகள் மகளை சீரழித்த தந்தைக்கு சாகும் வரை சிறை
ADDED : செப் 06, 2024 01:53 AM
திருவனந்தபுரம்கேரளாவில், 10 ஆண்டுகளாக மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் திருவனந்தபுரம் அருகில் உள்ள அருவிக்காரா கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் தாய், அவர் ஒன்றரை வயது குழந்தையாக இருக்கும் போதே இறந்துவிட்டார்.
மறுமணம் செய்த சிறுமியின் தந்தை, அவரை வளர்த்து வந்தார். சிறுமி 5 வயதாக இருக்கும் போதே பாலியல் ரீதியாக துன்புறுத்த துவங்கிய தந்தை, பல ஆண்டுகளாக இதை தொடர்ந்தார்.
கடந்த ஆண்டு, 10ம் வகுப்பு ஆங்கில தேர்வு எழுதிவிட்டு வந்த சிறுமியை, வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்தி மீண்டும் சீரழித்தார்.
மறுநாள் தேர்வு எழுத முடியாமல் சோர்வாக இருந்ததை பார்த்த சிறுமியின் ஆசிரியை அவரிடம் விசாரித்தார். அப்போது, 10 ஆண்டுகளாக சிறுமியை தந்தையே சீரழித்தது வெளிச்சத்துக்கு வந்தது.
இது தொடர்பாக குழந்தைகள் நலக் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார், சிறுமியின் தந்தையை கைது செய்தனர். தன் மீதான புகாரை அவர் தொடர்ந்து மறுத்து வந்தார்.
இது தொடர்பான விசாரணை திருவனந்தபுரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு தொடர்பாக, 30 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு, 26 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சிறுமியின் மாற்றாந்தாயிடமும் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தந்தை மீதான புகார் நிரூபணமானது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, சிறுமியை 10 ஆண்டுகளாக சீரழித்த 37 வயதான தந்தையை சாகும் வரை சிறையில் அடைக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு பதிந்து ஓராண்டுக்குள் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.