ADDED : மே 10, 2024 10:59 PM

முருகேஷ்பாளையா : தன்னுடன் 20 ஆண்டுகள் வசித்து வந்த திருநங்கையை கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு, முருகேஷ்பாளையாவின் ஸ்ரீராமநகரில், மஞ்சீ, 42, என்ற திருநங்கை வசித்து வந்தார். இவர் தங்கி இருந்த வீட்டில் இருந்து, இம்மாதம் 3ம் தேதி துர்நாற்றம் வீசியது. அப்பகுதியினர் ஜீவன்பீமாநகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து, வீட்டின் கதவை உடைத்து பார்த்தனர்.
அப்போது அழுகிய நிலையில், மஞ்சீ இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றிய போலீசார், பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் சகோதரன், கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது.
இதற்கிடையில், மஞ்சீ கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் மருத்துவர்கள் உறுதி செய்தனர். விசாரணையில், திருநங்கையுடன், ஒரு பெண் 20 ஆண்டுகளாக தங்கி இருந்ததாக தெரியவந்தது. சில நாட்களாக அவரை காணவில்லை.
இதனால் அவர் மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவருடைய முகவரியை அறிந்து, ஹாசன் மாவட்டம், சென்னராயப்பட்டணா தாலுகா, அய்யரஹள்ளி கிராமத்துக்கு, போலீசார் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்றனர்.
அங்கிருந்த பிரேமா, 51, என்ற பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆரம்பத்தில் கொலை நடந்தது தெரியாது என்று கூறினார். பின்னர், கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
இதுகுறித்து, பெங்., நகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
இறந்த திருநங்கை மஞ்சீ உடன், 20 ஆண்டுகளாக முருகேஷ்பாளையாவில் வசித்து வந்ததாகவும், ஏப்ரல் 26ம் தேதி இரவு இருவரிடயே சண்டை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சண்டையின்போது, கத்தியால் தன்னை குத்திக் கொலை செய்ய வந்ததால், துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக பிரேமா வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, பிரேமாவை கைது செய்த போலீசார், பெங்களூரு அழைத்து வந்தனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.