காளி சிலை மீது ரத்தம் தெளித்த பெண் எஸ்.ஐ., தலைமறைவு
காளி சிலை மீது ரத்தம் தெளித்த பெண் எஸ்.ஐ., தலைமறைவு
ADDED : பிப் 28, 2025 05:58 AM
மங்களூரு: மங்களூரில் உள்ள சலுானில் விபசாரம் நடப்பதாக கிடைத்த தகவலின்படி, ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் பிரசாத் அட்டாவர் உள்ளிட்டோர் கடந்த மாதம் சலுானில் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து, உடைத்து சூறையாடினர்.
இந்த வழக்கில் பிரசாத் அட்டாவர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பிரசாத்திடம் இருந்து பறிமுதல் செய்த மொபைல் போனை போலீசார் பார்த்தபோது, ஆடுகளை வெட்டி ரத்தத்தை காளி சிலை மீது தெளிக்கும் வீடியோக்கள் இருந்தன.
காளி சிலையின் கை பகுதியில் முடா வழக்கில் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக போராடி வரும், சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா, தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் கங்கராஜு ஆகியோரின் புகைப்படங்கள் இருந்தன.
இது தவிர, ஒரு துண்டு சீட்டில் சுமா ஆச்சார் என்ற பெயரும் எழுதப்பட்டு இருந்தது. ஆடுகளை பலியிட்டது தொடர்பாக மங்களூரு சி.சி.பி., போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
ஆடுகளை பலியிட்ட இடம் எது என்பது முதலில் தெரியாமல் இருந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் பெங்களூரு அசோக் நகரில் உள்ள மயானத்தில் வைத்து ஆடுகளை பலியிட்டதும், அப்பகுதியில் உள்ள காளி சிலை மீது ரத்தத்தை தெளித்ததும் தெரிந்தது.
துண்டு சீட்டில் எழுதப்பட்டு இருந்த சுமா ஆச்சார் யார் என்று போலீசார் விசாரித்த போது, பிரசாத் அட்டாவர் மனைவி என்பது தெரிந்தது.
உடுப்பி போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ., ஆக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது.
ஆடுகளை வெட்டி பலியிட்டதில் சுமாவுக்கும் தொடர்பு இருந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. இதனால் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மொபைல் போனை 'சுவிட்ச் ஆப்' செய்துவிட்டு தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த தகவலை, மங்களூரு போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் உறுதிப்படுத்தி உள்ளார்.

