போக்குவரத்து விதிகளில் கறார் 3 மாதத்தில் குறைந்த பலிகள்
போக்குவரத்து விதிகளில் கறார் 3 மாதத்தில் குறைந்த பலிகள்
ADDED : ஆக 15, 2024 04:41 AM

பெங்களூரு : ''கர்நாடகாவில் வேக கட்டுப்பாடு கருவி, ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கியதால், கடந்த மூன்று மாதங்களில் நேர்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது,'' என, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை ஏ.டி.ஜி.பி., அலோக் குமார் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று முன்தினம் அவர் அளித்த பேட்டி:
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அதிவேகம், போக்குவரத்து விதிமீறல், மோசமான சாலை கட்டமைப்பு, கவனக் குறைவாக வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாதது, சீட் பெல்ட் போடாதது ஆகிய காரணங்களால், விபத்துகள் அதிகரித்தன.
கடந்த 2023 ஜனவரி முதல் ஜூலை வரையிலான கால கட்டத்தில் 3,122 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். ஒரு நாளைக்கு சராசரியாக 34 பேர் பலியாகினர்.
நடப்பாண்டு இதே காலகட்டத்தில் 2,682 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு நாளைக்கு சராசரியாக 29 பேர் பலியாகி உள்னர்.
கடந்த மே முதல் ஜூலை வரை, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக செல்வதைத் தடுக்க வேகக் கட்டுப்பாடு, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கும், ஹெல்மெட் அணியாமல் செல்வோருக்கும் அபராதம், லைசென்ஸ் சஸ்பெண்ட், சீட் பெல்ட் போட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே முதல் ஜூலை ஆகிய காலகட்டத்தில் 412 பேர் உயிரிழந்திருந்தனர். நடப்பாண்டு இதே காலகட்டத்தில் 192 பேர் உயிரிழந்துள்ளனர்.
தினசரி உயிரிழப்பு, நான்கில் இருந்து இரண்டாக குறைந்து உள்ளது. இறப்பு எண்ணிக்கை 16 சதவீதம் குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.