செப்.,4ல் வார்டு கமிட்டி தேர்தல் நாளை வேட்பு மனு தாக்கல்
செப்.,4ல் வார்டு கமிட்டி தேர்தல் நாளை வேட்பு மனு தாக்கல்
ADDED : ஆக 28, 2024 07:19 PM
புதுடில்லி:டில்லி மாநகராட்சியின் 12 மண்டலங்களிலும் வார்டு கமிட்டி தேர்தல் செப்டம்பர் 4ம் தேதி நடக்கிறது.
டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் விதிமுறைகள், 1958-ன் படி ரகசிய வாக்கெடுப்பு வாயிலாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பும் கவுன்சிலர்கள், நாளை வரை மாநகராட்சி செயலரிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் சிட்டி, எஸ்.பி., ரோகிணி, நஜப்கர், மேற்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலம் ஆகிய ஆறு மண்டலங்களுக்கு காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மாநகராட்சி தலைமை அலுவலகத்தின் ஹன்ஸ்ராஜ் குப்தா ஆடிட்டோரியத்தில் தேர்தல் நடக்கும்.
கரோல் பாக், கேசவபுரம், ஷதாரா தெற்கு, ஷதாரா வடக்கு, சிவில் லைன்ஸ் மற்றும் நரேலா ஆகிய ஆறு மண்டலங்களுக்கு மாநகராட்சி தலைமை அலுவலகத்தின் சத்ய நாராயண் பன்சால் ஆடிட்டோரியத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது.
வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். அதில் வேட்பாளரும் மற்ற 2 மாநகராட்சி கவுன்சிலர்கள் முன்மொழிந்திருக்க வேண்டும்.
வேட்புமனு தாக்கல் நாளை காலை 11:00 மணிக்கு துவங்கி மாலை 5:00 மணிக்கு நிறைவடையும். அதேநேரத்தில் தேர்தல் நாளுக்கு முன் எந்த நேரத்திலும் வேட்புமனுவை திரும்பப் பெறலாம்.

