ADDED : ஜூன் 16, 2024 07:39 AM

ஹூப்பள்ளி: ''நடிகர் தர்ஷனுக்காக, மொத்த திரையுலகையும் குற்றஞ்சாட்ட கூடாது. இவரை விவசாய துாதராக நியமித்தது சரியல்ல,'' என, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நடிகர் தர்ஷனை, காங்கிரஸ் அரசு விவசாய துாதராக நியமித்தது. திரையுலக நடிகர், நடிகையை நியமிப்பது எந்த விதத்தில் சரி? யாரோ ஒருவர் செய்த தவறுக்கு, மொத்த திரையுலகையும் பொறுப்பாளி ஆக்க வேண்டாம்.
கன்னட திரையுலகில் பல நல்ல நடிகர்கள் உள்ளனர். ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன் உள்ளிட்ட சிறந்த நடிகர்கள் இருந்தனர். அவர்கள் நாட்டுக்கு முன்மாதிரியாக உள்ளனர்.
முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை கைது செய்வதன் மூலம் மாநில அரசு, அரசியல் ரீதியில் பழி வாங்க முயற்சித்தது. அவருக்கு ஜாமின் இல்லா வாரண்ட் பிறப்பித்தது சரியல்ல என, கர்நாடக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
தார்வாடில் பஜ்ரங்தள் தொண்டர் மீது தாக்குதல் நடந்துள்ளது. சமீப நாட்களாக ஹிந்து தொண்டர்கள் மீது, தாக்குதல் நடக்கிறது. ஒரு வகையில் கர்நாடகா, குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு பாதுகாப்பு சொர்க்கமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.