ADDED : ஜூலை 09, 2024 01:03 AM
பெங்களூரு, கர்நாடக மாநில தீயணைப்பு துறை வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரில் தீ விபத்து ஏற்படும்போது, குறுகலான இடங்களில் தீயை கட்டுப்படுத்தவும், அபாயத்தில் சிக்கியவர்களை காப்பாற்றவும், ரோபோக்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்த பணிக்காக, விரைவில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ரோபோ வாங்கப்படும். 1 கோடி ரூபாய் செலவில், இதை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
நடப்பாண்டு இறுதிக்குள், தீயணைப்பு துறையில் இந்த ரோபோ சேரும். தீயை அணைக்க ரோபோ பயன்படுத்துவது புதிய விஷயம் அல்ல. டில்லி, மும்பை, ஹரியானா உட்பட பல்வேறு மாநிலங்களில் பயன்பாட்டில் உள்ளன.
குறுகலான சாலைகள், குடோன், பல மாடி கட்டடங்கள் உட்பட சிக்கலான இடங்களில் தீயை கட்டுப்படுத்துவது, ஊழியர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.
இத்தகைய இடங்களில் தீயை கட்டுப்படுத்த, ரோபோ உதவியாக இருக்கும். ரோபோவில் தீ பிடிக்காத போர்வை, எலக்ட்ரிக் கண்கள் என, அனைத்து வசதிகளும் இருக்கும்.
திடீரென தீப்பிடிக்கும்போது, உயிர் சேதங்களை தடுக்க உதவியாக இருக்கும். இது, 100 அடி துாரம் வரை, தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் திறன் கொண்டது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.