ADDED : ஜூன் 16, 2024 01:33 AM
இம்பால், மணிப்பூர் முதல்வரின் அரசு பங்களாவை ஒட்டியுள்ள தலைமைச் செயலகம் அருகே பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கூகி மற்றும் மெய்டி சமூகத்தினரிடையே கடந்தாண்டு பெரும் கலவரம் ஏற்பட்டு, ஏராளமானோர் பலியாகினர்.
இந்த பிரச்னை தணிந்திருந்தாலும், அவ்வப்போது சிறு சிறு கலவரங்கள் வெடிக்கின்றன. முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மீது வன்முறை கும்பல் சமீபத்தில் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், முதல்வர் பைரேன் சிங்கின் அரசு பங்களாவை ஒட்டி உள்ள தலைமைச் செயலகம் அருகே பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து நான்கு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த பகுதியில் கூகி சமூகத்தினரின் அலுவலகம் உள்ளது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இதில் சதிச்செயல் இருப்பதை மறுப்பதற்கில்லை என்றனர்.