ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை; பயங்கரவாதிகள் 3 பேரை சுட்டுக்கொன்றது ராணுவம்
ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை; பயங்கரவாதிகள் 3 பேரை சுட்டுக்கொன்றது ராணுவம்
ADDED : ஆக 29, 2024 10:47 AM

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தேர்தல்
ஜம்மு காஷ்மீரில் வரும் செப்.,18, செப்.,25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நாட்களில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அங்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஊடுருவல்
இந்த நிலையில், நேற்றிரவு டங்கர், மச்சில் மற்றும் ரஜௌரியின் லத்தி கிராமம் ஆகிய 3 இடங்களில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், ராணுவ வீரர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார், தேடும் பணியில் ஈடுபட்டனர்.
துப்பாக்கிச்சண்டை
அப்போது, ஹேரி மொஹ்ரா எனும் பகுதியில் திடீரென ராணுவத்தினர் மீது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு இந்திய ராணுவத்தினரும் தாக்குதலில் ஈடுபட்டனர். கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டு, அவர்களை சுற்றி வளைத்ததில், 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மக்கள் பீதி
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ராணுவத்தினர் மற்றும் பயங்கரவாதிகளிடையே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதால், தேடுதல் பணி தொடர்ந்து நீடித்து வருகிறது.