புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் ஹாசனில் முதல் வழக்கு பதிவு
புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் ஹாசனில் முதல் வழக்கு பதிவு
ADDED : ஜூலை 02, 2024 06:48 AM

ஹாசன்: நாடு முழுதும், மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதையடுத்து, பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ், கர்நாடகாவில், ஹாசனில் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனை சட்டம், சி.ஆர்.பி.சி., எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம், ஐ.இ.சி., எனப்படும் இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக, மூன்று புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன.
அதாவது, 'பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷிய அதினியம்' ஆகிய மூன்று சட்டங்களும் நேற்று முதல், நாடு முழுதும் அமலுக்கு வந்தன.
பெண் பலி
பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து, ஹாசன் மாவட்டம், ஹலேபீடுவை நோக்கி இந்துமதி, 67, அவரது கணவர் யோகீஷ், 70, ஆகியோர் நேற்று முன்தினம் காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, சீகேகேட் என்ற பகுதியில், மேம்பாலத்தின் மீது இருந்து கார் விழுந்தது. இதில், இந்துமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இவரது கணவரும், கார் ஓட்டுனரும் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, இறந்தவரின் மருமகன் கொடுத்த புகாரின் அடிப்படையில், பி.என்.எஸ்., எனும் 'பாரதிய நியாய சன்ஹிதா' என்ற புதிய சட்டத்தின், 281, 106 பிரிவுகளின் கீழ், ஹாசன் ரூரல் போலீஸ் நிலையத்தில், நேற்று காலை 9:15 மணிக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது. புதிய சட்டத்தின் கீழ், மாநிலத்தில் பதிவான முதல் வழக்கு இதுவாகும்.
அதிவேகமாகவும், அலட்சியமாகவும் வாகனம் ஓட்டி வந்த கார் ஓட்டுனர் சாகர் மீது வழக்கு பதிவாகி உள்ளது. தம்பதி காசி யாத்திரை முடித்து, வீடு திரும்பி கொண்டிருந்த போது, விபத்து நடந்தது குறிப்பிடத்தக்கது.
மொபைல் செயலி
இதற்கிடையில், புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்கள் குறித்து, கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், பெங்களூரில் நேற்று கூறியதாவது:
மூன்று புதிய சட்டங்களும் அமலுக்கு வந்துள்ளன. சட்டங்கள் அமல்படுத்த, ஒரு மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இனி பதிவாகும் அனைத்து வழக்குகளும், புதிய சட்டங்களின்படி பதிவு செய்யப்படும்.
சில நாட்கள் கழித்த பின்னர் தான், இதன் சாதக, பாதங்கள் தெரியும். புதிய சட்டங்கள் குறித்து, ஏட்டு முதல், உயர் அதிகாரிகள் வரை ஏற்கனவே போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கூறினார்.
...பாக்ஸ்...
கர்நாடக அரசு எதிர்ப்பு
திருத்தம் கொண்டு வர முடிவு
கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல், பெங்களூரில் நேற்று கூறியதாவது:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்களுக்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளது. அதில், திருத்தம் கொண்டு வருவது குறித்தும் யோசனை உள்ளது.
முந்தைய அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்ட சட்டங்களை, புதிய அரசு அமல்படுத்துவது சரியில்லை. 2023ல், முதல்வர் சித்தராமையாவுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடிதம் எழுதி, ஆலோசனை கூறும்படி கடிதம் எழுதி இருந்தார்.
அப்போது, 23 ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ஆனால், எங்கள் ஆலோசனைகளை அவர்கள் ஏற்று கொள்ளவில்லை. ஒரு விஷயத்தை கூட, சட்டத்தில் சேர்க்கவில்லை.
புதிய சட்டங்களால், சாதகங்களை விட, பாதங்களே அதிகமாக உள்ளன. மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் சட்டங்களாக உள்ளன. மக்கள், வழக்கறிஞர்கள் விருப்பத்துக்கு மாறாக சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளன. எனவே மூன்றுக்கும் கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்கிறது.
சட்டங்களை திருத்துவதற்கு, மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. அரசியல் அமைப்பு மாநில அரசுக்கு வழங்கி உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, திருத்தம் கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
***
...பாக்ஸ்...
தொடர்ந்து பயிற்சி
'எக்ஸ்' சமூக வலைதளத்தில், டி.ஜி.பி., அலோக் மோகன் அறிக்கை:
மாநிலத்தில் உள்ள ஏழு மண்டலங்கள், ஆறு போலீஸ் கமிஷனர் பிரிவுகள், 1,063 போலீஸ் நிலையங்கள் உட்பட மாநிலத்தின் அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும், புதிதாக அமலுக்கு வந்துள்ள மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்கள் குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
***