ADDED : ஏப் 06, 2024 11:12 PM
பெங்களூரு: லோக்சபா தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு, இன்று முதற்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக பெங்களூரு நகர மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தயாராகின்றனர்.
இதுதொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி தலைமை தேர்தல் அதிகாரி துஷார் கிரிநாத், அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி வழியாக நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு, நாளை (இன்று) முதற்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. நாளைய பயிற்சிக்கு ஏற்கனவே சிறப்பு பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து அதிகாரிகளும், தவறாமல் பயிற்சிக்கு ஆஜராக வேண்டும்.
பயிற்சி அளிக்கும் இடங்களில், குடிநீர், கழிப்பறை வசதி இருக்க வேண்டும். உணவு உட்பட, அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்ய வேண்டும். அந்தந்த சட்டசபை தொகுதியின் உதவி தேர்தல் அதிகாரிகள், பயிற்சி நடக்கும் இடங்களுக்கு சென்று, வசதிகள் சரியாக உள்ளனவா என, ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

