ADDED : ஜூன் 20, 2024 01:12 AM
குவஹாத்தி, அசாமின் கரிம்கஞ்ச் மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட, ஐந்து பேர் உயிரிழந்தனர்.
வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த நில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கரிம்கஞ்ச் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கடும் வெள்ள பாதிப்பு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், 1.61 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கரிம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கைனகோரா கிராமத்தில் பெய்த தொடர்மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்தன. சம்பவம் பற்றி அறிந்த பதர்பூர் போலீசார் மாநில பேரிடர் மீட்புப் படையினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் மூன்று மணி நேர போராட்டத்துக்கு பின் ஐந்து சடலங்களை மீட்டனர்.
உயிரிழந்தவர்கள் ரய்முன் நெஸ்சா, 55, அந்த பெண்ணின் மூன்று பிள்ளைகள் ஷகிதா கானம், 18, ஜகிதா கானம், 16, ஹமிதா கானம், 11, என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுதவிர, மஹிமுதின் என்பவரது 3 வயது குழந்தை மெஹ்தி ஹாசனும் உயிரிழந்துள்ளார்.