ADDED : மார் 02, 2025 06:31 AM

சாம்ராஜ்நகர்: லாரி மோதியதில், எதிரே வந்த காரில் மலை மஹாதேஸ்வரா கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த இரு பெண்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.
மைசூரைச் சேர்ந்த ஸ்ரீலட்சுமி, லிகிதா, மாண்டியாவைச் சேர்ந்த சுஹாஸ், நிதின், ஸ்ரேயாஸ் ஆகியோர் நேற்று மலை மஹாதேஸ்வரா கோவிலில் நடக்கும் மஹா சிவராத்திரி தேர் திருவிழாவை பார்க்க காரில் சென்றனர்.
கொள்ளேகாலின் சிக்குந்திவடி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஹனுாரில் இருந்து வந்து கொண்டிருந்த லாரி, முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயற்சித்தபோது, எதிரே வந்த கார் மீது மோதியது.
மோதிய வேகத்தில் 25 மீட்டர் துாரத்துக்கு காரை இழுத்துச் சென்ற லாரியும், காரும் சாலை ஓரத்தில் கவிழ்ந்தன. விபத்து நடந்தவுடன், லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
விபத்தை பார்த்த அப்பகுதியினர், காரில் இருப்பவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அதற்குள் காரில் இருந்த 20 முதல் 22 வயதுக்கு உட்பட்ட இரு இளம்பெண்கள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது தொடர்பாக கொள்ளேகால் ரூரல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மலை மஹாதேஸ்வரா சென்ற பின், அங்கிருந்து ஒகேனக்கல் செல்ல திட்டமிட்டிருந்ததாக, போலீஸ் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.