ADDED : ஏப் 30, 2024 01:55 AM
கனகபுரா, கர்நாடகாவில், சுற்றுலா சென்ற மூன்று கல்லுாரி மாணவியர், இரு மாணவர்கள் என ஐந்து பேர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் 12 பேர், வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். நேற்று மதியம் ராம்நகர், கனகபுராவின் மேகதாதுவுக்கு டெம்போ டிராவல்ஸ் வாகனத்தில் சுற்றுலா சென்றனர். இங்குள்ள காவிரி ஆற்றில் இறங்கி விளையாடினர். இவர்கள் அப்பகுதிக்கு புதியவர்கள் என்பதால், ஆற்றின் ஆழம் பற்றியோ, சுழல் இருப்பது பற்றியோ அறிந்திருக்கவில்லை.
இதனால், அபிஷேக், 20, வர்ஷா, 20, ஹர்ஷிதா, 20, தேஜஸ், 21, ஸ்நேஹா, 19, ஆகியோர் சுழலில் சிக்கி வெளியே வர முடியாமல், நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன், ஐந்து பேரின் உடல்களை வெளியே எடுத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

