பெங்., லால்பாக் பூங்காவில் மலர் கண்காட்சி துவக்கம்
பெங்., லால்பாக் பூங்காவில் மலர் கண்காட்சி துவக்கம்
ADDED : ஆக 08, 2024 10:22 PM

பெங்களூரு : ''அரசியல் சாசன முக்கியத்துவத்தை, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்,'' என்று, மலர் கண்காட்சி துவக்க விழாவில், முதல்வர் சித்தராமையா பேசினார்.
சுதந்திர தினத்தை ஒட்டி, பெங்களூரு லால்பாக் பூங்காவில் 216வது மலர் கண்காட்சியை, முதல்வர் சித்தராமையா நேற்று துவக்கி வைத்தார். பின், கண்காட்சியில் இடம் பெற்று உள்ள அம்பேத்கர் உருவ சிலை, மலர்களால் வடிவமைக்கப்பட்ட பார்லிமென்ட் கட்டடத்தையும் பார்வையிட்டார். மலர்கள் பற்றி தோட்ட கலை அதிகாரிகள் எடுத்து கூறினர்.
பின், சித்தராமையா பேசியதாவது: சட்ட மேதை அம்பேத்கர் நம்முடன் எப்போதும் இருக்கிறார். அவர் இயற்றிய அரசியல் சாசனத்தின் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதனால் இந்த ஆண்டு மலர் கண்காட்சியை, அம்பேத்கருக்கு அர்ப்பணித்து உள்ளோம். இந்த சமூகத்தில் ஜாதி, மதம், மொழி பாகுபாடு இன்றி, அனைவருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும்.
மக்கள் பொருளாதார மற்றும் சமூக சுதந்திரத்தை பெற்றால் மட்டுமே, சுதந்திரம் அடைய முடியும் என்று அம்பேத்கர் நம்பினார். அவரது சிறு வயது முதல் கடைசி வரை செய்த சாதனைகள், பல்வேறு வடிவங்களில் கண்காட்சியில் சித்தரிக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சியில் 12 லட்சம் பேர் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
முதல் நாளான நேற்று மாலை, கண்காட்சிக்கு கணிசமாக மக்கள் வந்தனர். வரும் நாட்களில் கூட்டம் அதிகரிக்கும் என்று, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். வரும் 19ம் தேதி வரை தினமும் காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, கண்காட்சி நடக்க உள்ளது.