ADDED : மார் 25, 2024 04:08 AM

புதுடில்லி: இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி ஏர் சீப் மார்ஷல் ஆர்.கே.எஸ்.பதவுரியா, 64, பா.ஜ.,வில் நேற்று இணைந்தார்.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பதவுரியா, இந்திய விமானப்படையில் 40 ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.
வாய்ப்பு
இந்நிலையில், டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலர் வினோத் தாவ்டே, மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் ஆகியோர் முன்னிலையில் பதவுரியா நேற்று இணைந்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நம் தேசத்தை கட்டமைக்கும் நோக்கில் புதிய இன்னிங்சை துவக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
''தேசிய பாதுகாப்பில், பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை அளப்பரியது; கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ராணுவ தளவாடங்களை நவீனமயமாக்குவதுடன், உள்நாட்டிலேயே தயாரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது நம் பாதுகாப்புப் படையின் பொற்காலமாகும்,” என்றார்.
இதேபோல் ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் முன்னாள் எம்.பி.,யும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான வரபிரசாத் ராவும், 70, அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் நேற்று இணைந்தார்.
இருவரும் பா.ஜ.,வில் இணைந்தது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் கூறுகையில், “இருவரும், அரசு பணியில் நீண்டகாலம் பணியாற்றியவர்கள். தற்போது, நாட்டிற்கு சேவை செய்யும் நோக்கில் பா.ஜ.,வில் இணைந்துஉள்ளனர்,” என்றார்.
வளர்ந்த பாரதம்
இதற்கிடையே, பிரபல தொழிலதிபரும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.,யுமான நவீன் ஜிண்டால், 54, அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் நேற்று இணைந்தார்.
டில்லியில் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் அதன் பொதுச்செயலர் வினோத் தாவ்தே முன்னிலையில், நவீன் ஜிண்டால் இணைந்தார். அவர் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடியின் கனவான வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதில் என் பங்களிப்பை அளிக்க விரும்புகிறேன்,” என்றார்.

