'போக்சோ' வழக்கில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, நேற்று சி.ஐ.டி., போலீசார் விசாரணைக்கு ஆஜர்!
'போக்சோ' வழக்கில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, நேற்று சி.ஐ.டி., போலீசார் விசாரணைக்கு ஆஜர்!
ADDED : ஜூன் 18, 2024 06:31 AM

பெங்களூருரு: 'போக்சோ' வழக்கில், பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா, நேற்று சி.ஐ.டி., போலீசார் விசாரணைக்கு நேரில் ஆஜரானார். அவரிடம், பல கேள்விகள் கேட்டு, மூன்று மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
கர்நாடகாவில் நான்கு முறை முதல்வராக இருந்தவர் பா.ஜ.,வின் எடியூரப்பா, 81. இவரிடம், கடந்த பிப்ரவரி 2ம் தேதி, மமதா, 55, என்ற பெண், தன் 17 வயது மகளுடன், உதவி கேட்டு, அவரது டாலர்ஸ் காலனி வீட்டுக்கு சென்றுள்ளார். அவருக்கு உதவும் வகையில், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தாவை தொடர்பு கொண்டு எடியூரப்பா பேசி உள்ளார்.
இதற்கிடையில், எடியூரப்பா, தன் மகளை அறைக்குள் அழைத்து சென்று, பாலியல் ரீதியாக சீண்டியதாக, அப்பெண் சதாசிவ நகர் போலீசில், மார்ச் 14ம் தேதி புகார் அளித்தார். 17 வயது சிறுமி என்பதால், 'போக்சோ' சட்டத்தின் கீழ், எடியூரப்பா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
புகார்தாரர் பலி
இவ்வழக்கை சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், கடந்த மே 27ம் தேதி, புகார் அளித்த பெண், புற்றுநோயால் உயிரிழந்தார். இதே வேளையில், தன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யும்படி, உயர் நீதிமன்றத்தில் எடியூரப்பா மனு தாக்கல் செய்தார்.
ஆனால், எடியூரப்பா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், போலீசார் தாமதம் செய்து வருவதாக, புகார் அளித்த பெண்ணின் சகோதரர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து, இம்மாதம் 13ம் தேதி, விசாரணைக்கு ஆஜராகும்படி, எடியூரப்பாவுக்கு சி.ஐ.டி., சம்மன் அனுப்பியது.
கைதுக்கு தடை
அவரோ, தான் டில்லியில் இருப்பதால், 17ம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாக, தன் வழக்கறிஞர்கள் மூலம் கடிதம் அனுப்பினார். இதை ஏற்காத சி.ஐ.டி., எடியூரப்பாவை கைது செய்ய பிடிவாரன்ட் பிறப்பிக்கும்படி, பெங்களூரு 51வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இம்மனுவை விசாரித்த நீதிபதி, எடியூரப்பாவுக்கு ஜாமின் இல்லா பிடிவாரன்ட் பிறப்பித்தார்.
மறுநாள் அவரை கைது செய்ய, சி.ஐ.டி., போலீசார் டில்லி புறப்பட்டு சென்றனர். அதற்குள், பிடிவாரன்டை ரத்து செய்ய கோரி, உயர் நீதிமன்றத்தில் எடியூரப்பா மேல்முறையீடு செய்தார். இதை ஏற்று, அவரை கைது செய்ய தடை விதித்த நீதிமன்றம், ஜூன் 17ம் தேதி, தவறாமல் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு அறிவுறுத்தியது.
இதன்படி, பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள சி.ஐ.டி., அலுவலகத்தில், நேற்று காலை 11:00 மணிக்கு எடியூரப்பா ஆஜரானார்.
அவரிடம் மதியம் 2:00 மணி வரை, விசாரணை அதிகாரி பிருத்வி, எஸ்.பி., சாரா, டி.எஸ்.பி., புனித் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.
வீடியோ சித்தரிப்பு
'புகார் அளித்த பெண் எதற்காக வந்தார்; அவரது மகளை பாலியல் ரீதியாக சீண்டினீர்களா; அந்த பெண்ணிடம் 2 லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறுப்படுவது உண்மையா' என்பது உட்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
'உதவி கேட்டு வந்த பெண்ணுக்கு நான் உதவியதால், என் மீதே புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில், அரசியல் காழ்ப்புணர்ச்சி உள்ளது' என்று அவர் பதில் அளித்துள்ளதாக தெரிகிறது. இதே வேளையில், 'அந்த பெண் ஏற்கனவே வெளியிட்ட வீடியோவில், நீங்கள் உள்ளீர்கள், அதில் நீங்கள் பேசுவதும் தெரிகிறது' என்று அதிகாரி கேட்டுள்ளார்.
'அவர்கள் என் வீட்டுக்கு வந்தது உண்மை, ஆனால் வீடியோ சித்தரிக்கப்பட்டுள்ளது' என்று அவர் பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் வர வேண்டும் என்றும் விசாரணை அதிகாரி கூறியுள்ளார். இதற்கு, கண்டிப்பாக வருகிறேன் என்றும் பதில் தெரிவித்துள்ளார்.
விசாரணை முடிந்ததும், எடியூரப்பா புறப்பட்டு சென்றார்.