ADDED : ஆக 29, 2024 10:53 PM

பசவேஸ்வரநகர்: வாடகைக்கு பெற்ற ஆட்டோவை, அடமானம் வைத்தவர் மற்றும் ஆட்டோவை தன் மனைவி பெயருக்கு மாற்றியவர் மீது, வழக்கு பதிவாகியுள்ளது.
பெங்களூரின் பசவேஸ்வர நகரில் வசிப்பவர் மோகன். இவர் தனக்கு சொந்தமான ஆட்டோவை, சாகர் என்ற டிரைவருக்கு வாடகைக்கு கொடுத்திருந்தார். தினமும் 200 ரூபாய் வாடகை கொடுத்து வந்தார்.
வாடகைக்கு எடுத்திருந்த ஆட்டோவை, உரிமையாளர் மோகனுக்கு தெரியாமல் லக்கரேவின், ஆட்டோ பைனான்சியர் சந்திரே கவுடாவிடம், சாகர் அடமானம் வைத்து ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.
இந்த ஆட்டோவை, பைனான்சியர் சந்திரே கவுடா, ராஜாஜி நகர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், தன் மனைவி சுஜாதா பெயருக்கு மாற்றிகொண்டார். சமீபத்தில் தன் ஆட்டோ வேறொருவரின் பெயரில் இருப்பது, மோகனுக்கு தெரியவந்தது. உடனடியாக, பசவேஸ்வரா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார், பைனான்சியர் சந்திரே கவுடாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்த போது, ஆவணங்கள் இல்லாமல், மனைவி பெயருக்கு ஆர்.சி.,யை மாற்றியது பற்றி கேட்டனர்.
அப்போது அவர், 'மோகன் பெயரில் இருந்த ஆர்.சி., கார்டை, ஆட்டோவை அடமானம் வைத்த சாகர், என்னிடம் கொடுத்திருந்தார். இந்த ஆவணங்கள், என் மனைவியின் ஆவணங்களையும் புரோக்கரிடம் கொடுத்தோம். அவர், என் மனைவி சுஜாதா பெயருக்கு, ஆட்டோவை மாற்றி கொடுத்தார்' என விவரித்தார்.
போலீசார், ஆட்டோவை பறிமுதல் செய்தனர். சாகர், சந்திரே கவுடா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த முறைகேட்டில் ஆர்.டி.ஓ., ஊழியர்களுக்கும் தொடர்பிருக்கும் என, ஆட்டோ உரிமையாளர் மோகன், சந்தேகம் தெரிவித்துள்ளார். விசாரணை தொடர்கிறது. இது குறித்து ஆர்.டி.ஓ., அதிகாரிகளிடமும், மோகன் புகார் செய்து உள்ளார்.
ராஜாஜிநகர் ஆர்.டி.ஓ., அதிகாரி சீனிவாஸ் கூறுகையில், ''இந்த விஷயத்தை நான் கடுமையாக கருதுகிறேன். உடனடியாக கோப்புகளை பரிசீலித்து, நடவடிக்கை எடுப்பேன்,'' என்றார்.

