ADDED : ஜூலை 24, 2024 05:25 AM
தங்கவயல் : 'தங்கவயலின் ஜக்ரசகுப்பா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட மருதகட்டா கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மோசடி நடந்துள்ளது' என, கோலார் மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷாவிடம் கிராமத்தினர் புகார் செய்தனர்.
மருதகட்டா கிராமத்தில் 'நரேகா' எனும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கிராம மக்களுக்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்க அரசு நிதி ஒதுக்கி உள்ளது.
இத்திட்டத்தில் ஏரிகள் துார்வாருதல், மழைநீர் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் வழங்கப்பட வேண்டும். ஆனால், கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காமல், பொக்லைன் இயந்திரங்களை கொண்டு பணிகளை நிறைவேற்றி உள்ளனர்.
இதற்கான தொகையும் சட்டவிரோதமாக ஒப்பந்ததாரர் பெற்றுள்ளார் என, மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷாவிடம் நேற்று கிராமத்தினர் புகார் செய்தனர்.
இதன் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் உறுதி அளித்தார்.

